தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டுள்ளதால் விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழாவை தடை செய்ய வேண்டும்: ஆளுநருக்கு சிவசேனா மனு

திருப்பூர்: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்கும் நிகழ்வை ரத்து செய்யக்கோரி சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தமிழக ஆளுநருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சருக்குரிய பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டது மற்றும் சர்ச் வளாகத்தில் கட்சியின் கொடியைக் காட்சிப்படுத்தியது போன்றவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (பிரிவு 123(3)) மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உள்ளன.

எனவே, தேர்தல் சட்டங்கள் மற்றும் மாதிரி நடத்தை விதிகளை மீறியது குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ​சட்ட நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் வரை, முன்மொழியப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவைத் தள்ளிவைக்கவோ அல்லது தடை செய்யவோ வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவினை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கும் அனுப்பியுள்ளார்.

Related Stories: