இன்று நள்ளிரவு முதல் அமல்; சிலிண்டர் முன் பதிவுக்கு புதிய விதிமுறைகள்: இடைவௌி 25 நாட்களாக அதிகரிப்பு

 

புதுடெல்லி: எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை, அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி ஓடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு இடைவெளி நகர்ப்புறங்களில் 21 நாளில் இருந்து 25 நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக சிலிண்டர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஈரான் அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் சிலிண்டர் வினியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாட்கள் என்று இருந்தது. தற்போது 25 நாட்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் இது 45 நாள்கள் வரை உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம் தற்காலிக அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இனி இது நிரந்தரமாக மாற்றப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்கள் அடையாளத்தை உறுதி செய்யாவிட்டால் அவர்களுக்கு இகேஒய்சி அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே பயோமெட்ரிக் உறுதி செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் மட்டும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம். சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க ஒன்றிய அரசு முயன்று வருகிறது. அவ்வாறு குழாய் மூலம் எரிவாயு சேவை பெறுவோர் சிலிண்டர்களை திரும்ப அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி செய்யும் போது, வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் 4 இலக்க ஓடிபிஐ, டெலிவரி செய்பவரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதற்கு மேல் முயற்சித்தால் கணினி மூலம் தானாகவே நிராகரிக்கப்படும். தவறான நபர் கையில் சிலிண்டர் செல்வதைத் தடுக்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் இந்த புதிய ஓடிபி முறை 100% கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: