சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை துவங்கி ஒருசில நாட்களிலேயே வெயில் தகிப்பதன் காரணமாக வெப்பம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் தற்போதுவரை சுமார் 1,351 ஏரிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளன. இன்னும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேலும் பல ஏரிகள் வறண்டு போக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 14,141 ஏரிகள் உள்ள நிலையில், இவற்றின் மூலம் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மாநிலம் முழுவதுமுள்ள சுமார் 1,351 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டுள்ளாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், வறண்டு போயுள்ள 1,351 ஏரிகளில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 380 ஏரிகள் அடக்கம், தவிர மதுரையில் 264 ஏரிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 129 ஏரிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 84 ஏரிகளும், திருச்சியில் 82 ஏரிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 53 ஏரிகளும், தேனியில் 50 ஏரிகளும், சேலத்தில் 42 ஏரிகளும் தண்ணீர் இன்றி வறண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சில முக்கிய ஏரிகளும் வெயிலின் தாக்கம் காரணமாக நீர் வற்றி வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் பாசனம், குடிநீர் உள்ளட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் இனி சிக்கல் எழக்கூடும் என்றும் கூறப்படுகிறது. பல ஏரிகள் வறண்டதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை குடிநீர் வழங்கலுக்குப் போதிய நீர் இருப்பு இருந்தாலும், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
