இந்தியா தகவல் தொழில்நுட்பத்தின் மையம், ஆனால் பாகிஸ்தானோ சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் – ராஜ்நாத் சிங்

டெல்லி: பாகிஸ்தானுடனான நீண்டகால மோதலுக்கு முழுமையாகத் தயாராக இருந்த போதிலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா தாமாக முன்வந்து, தனது சொந்த நிபந்தனைகளின் பேரிலேயே நிறுத்தியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.

ANI தேசிய பாதுகாப்பு உச்சிமாநாடு 2.0′-வில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்று வர்ணித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு அணுகுமுறையில் ஒரு திருப்புமுனை என்றார். மேலும் இது இந்திய ராணுவ பலத்தின் “ஒரு உறுதியான வெளிப்பாடு” என்று குறிப்பிட்டார். ​​நம்மை தாக்கியவர்களை துல்லியமாகக் குறி வைத்தோம். திறன்கள் குறைந்ததால் இந்த நடவடிக்கையை நிறுத்தப்படவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன் என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை 72 மணி நேரம் நீடித்த போதிலும், தயார் நிலை மற்றும் வலுப்படுத்தப்பட்ட தளவாடங்களின் ஆதரவுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்றார். தொடர்ந்து பாதுகாப்பு உற்பத்தி குறித்து பேசிய அமைச்சர், நம் நாட்டின் உள்நாட்டுத் திறன்கள் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்துள்ளது. பல நாடுகள் நம் ராணுவ உபகரணங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. 2025-26 நிதியாண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி சுமார் ரூ. 39,000 கோடியை எட்டியுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 62.66% அதிகம் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா தகவல் தொழில்நுட்பத்தின் மையமாக இருக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையம் என்ற அவப்பெயரை பெற்றிருக்கிறது. அதே போல பாகிஸ்தானுடனான மோதலின் போது விடுக்கப்பட்ட அணு ஆயுதம் மிரட்டல், வெற்று மிரட்டல் என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அந்த மிரட்டலை இந்தியா கண்டுகொள்ளவில்லை என்றார். மேலும் மதம் அல்லது சித்தாந்தம் அடிப்படையில் தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராகப் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்தார். இதுபோன்ற வாதங்கள் ஆபத்தானவை, தீவிரவாதத்திற்குத் துணை போக கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Related Stories: