சென்னையின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தன்ணீர் திறப்பு

புழல்: சோழவரம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெரும்பாலான ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. பராமரிப்பு பணிகள் காரணமாக சோழவரம் ஏரியில் 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நேற்று காலை நிலவரப்படி 489 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 11.77 அடி உயரத்தில் தண்ணீர் உள்ளது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் ஆவியாகி வீணாவதை தவிர்க்கும் வகையில் சென்னை குடிநீருக்கு பயன்படுத்திடும் வகையில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியில் இருந்து 4 ஷட்டர்கள் வழியே வினாடிக்கு 225 கன அடி தண்ணீரை, புழல் ஏரிக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று நிலவரப்படி நீர் இருப்பு 1997 மில்லியன் கன அடி உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 14.72 அடி உயரத்தில் தண்ணீர் உள்ளது.

சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 187 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரியின் நீர்மட்டம் 2 டிஎம்சிக்கு கீழ் சரிந்த நிலையில், சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேலும் புழல் ஏரி நீர்மட்டம் குறையாமல் பராமரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: