சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் 2ம் தேதி முதல் விடுப்பு எடுக்க தடை: டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவம் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூம்களில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 62 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததால், வாக்கு எண்ணிக்கை அன்றும் அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக செய்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தமிழக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது தேர்தல் வாக்கு எண்ணும் பணியின் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.  மேலும், குற்ற பின்னணியில் உள்ள நபர்களை வாக்கு எண்ணிக்கை அன்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏ பிளஸ் மற்றும் ஏ, பி கேட்டகிரி ரவுடிகள் அனைவரையும் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணிக்கை அன்று மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், தேர்தல் பாதுகாப்பு பணி காரணமாக தற்போது மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பில் இருப்பவர்களை தவிர, மற்ற அனைத்து வகையான போலீசாரும் வரும் 2ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை யாரும் விடுமுறை எடுக்க கூடாது. அப்படி அவசர காவல விடுப்பு தேவை என்றால் சம்பந்தப்பட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர கமிஷனர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று விடுப்பு பெற்று கொள்ளலாம்.

தேவையின்றி யாரேனும் விடுப்பு எடுத்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே, வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அந்தந்த மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: