மதுரை: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதிகளில் நேற்று கோலாகமாக நடந்தது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைப் பெருவிழா ஏப். 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று துவங்கி தினமும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 26ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 27ம் தேதி திக்கு விஜயம் நடந்தது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் காலை வெகு சிறப்பாக நடந்தது. திருக்கல்யாணத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.35 லட்சம் செலவில், 10 டன் எடையுள்ள பல வண்ண பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவமான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முதலில் விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. அதிகாலை 5.29 மணிக்கு பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர் பெரிய தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து மீனாட்சி அம்மன் சிறிய தேரில் எழுந்தருளினார். காலை 6.12 மணிக்கு பெரிய தேர், காலை 6.27 மணிக்கு சிறிய தேரை கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் மற்றும் கலெக்டர் பிரவீண்குமார், போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்ஷித் தலைமையில், அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் இணை கமிஷனர் சுரேஷ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய…’ என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி – அம்மன் தேர்கள் ஆடி, அசைந்து வலம் வந்ததை காண பல லட்சம் பக்தர்கள், குழந்தைகளுடன் வீதிகளில் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை மற்றும் காளை வலம் வந்தன. இளைஞர்கள் ஆர்வத்துடன் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர்.
சித்திரை திருவிழா தேரோட்டத்தால் மதுரை நேற்று களைகட்டியது. 5 கி.மீ. சுற்றளவுள்ள 4 மாசி வீதிகளிலும் தேர் வலம் வந்தது. திரும்பும் திசை எல்லாம் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெரிய தேர் 12.15 மணிக்கும், சிறிய தேர் 12.30 மணிக்கும் நிலைக்கு வந்தது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை பார்வையிட்டு, சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.
மாசி வீதிகளில் மக்கள் வெள்ளமாய் காட்சியளித்தது. பல்வேறு நிறுவனத்தினர், அமைப்புகளை சேர்ந்த பலர் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் பசி, தாகம் தீர்க்க நீர்மோர், புளியோதரை, பொங்கல், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
வெயிலை சமாளிக்க விசிறிகளையும் வழங்கினர். மாசி வீதிகளில் கடைகள் மற்றும் மாடி வீடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நின்று, தேரில் பவனி வந்த அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தனர். தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் சென்றதால் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமிகள் வரும் வரை நடை சாத்தப்பட்டு இருந்தது.
* மத நல்லிணக்கம்
மதுரை மக்கள் எப்போதும் மத நல்லிணக்கத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் மாசி வீதிகளில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் நீர் மோர், ரோஸ்மில்க், குளிர்பானங்கள் மற்றும் லட்டு உள்ளிட்டவற்றை வழங்கினர். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மனிதம் அனைவருக்குமானது என்பதை பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
* தங்கப்பல்லக்கில் புறப்பட்டாரு… வாராரு…வாராரு… அழகர் வாராரு!
மதுரை அருகே அழகர்கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 27ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்கள் பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்றுக்காலை தோளுக்கினியான் பல்லக்கில் கள்ளழகர் அலங்காரத்தில் கோயிலை வலம் வந்தார். பின்னர் மாலை 5.15 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, மாலை 5.50 மணிக்கு கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அங்கு கொம்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் 18ம்படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று மாலை 6.15 மணிக்கு கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா…. கோவிந்தா என விண்ணதிர முழக்கத்துடன் கோஷங்கள் எழுப்பி அழகரை அனுப்பி வைத்தனர். இரவு முழுவதும் பயணிக்கும் அழகர், இன்று காலை 6.30 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். மதுரை நகரின் எல்லையான அங்கு, அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கும்.
இதைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் நாளை (மே 1) காலை 5.35 மணியில் இருந்து 5.55 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வர்கள்.பகல் 12 மணிக்கு மேல் ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளியதும் அங்கப்பிரதட்சணம் மற்றும் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மே 2ம் தேதி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தலும், ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 3ம் தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளலும், மே 4ம் தேதி அதிகாலை பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மலைக்கு திரும்பும் அழகர் மே 5ம் தேதி இருப்பிடம் திரும்புகிறார். மே 6ம் தேதி உற்சவசாந்தியுடன் அழகர்கோவில் திருவிழா முடிகிறது.
* வெயிலிலும் திரண்ட பக்தர்கள்
* தேரோட்டத்திற்காக திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் சுமார் 7 டன் எடையில் ரூ.40 லட்சம் மதிப்பில் 4 புதிய இரும்புச் சக்கரங்கள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணியாளர்கள் அனைவரும் தேரோட்டத்திற்கு ஒரே கலர் சீருடையில் பங்கேற்று தேர்பவனியில் வலம் வந்தனர்.
* மாசி வீதிகளில் தேர்களின் முன்னே பக்தர்கள் சிவன் சிலையை போன்ற மாதிரி சிலைகளை தோளில் தூக்கி கொண்டு ஊர்வலமாக வந்தது கூடியிருந்தவர்களை பரவசப்படுத்தியது.
* சித்திரை திருவிழா திருக்கல்யாணத்திற்கு அதிகமான பெண்கள், குழந்தைகள் வருவது போல நேற்றைய தேரோட்டத்திற்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டனர். கடுமையான வெயில் காலம் என்பதால் தேர்களை வடம் பிடித்து இழுத்து வரும் போது, பல இடங்களில் இளைஞர்களுக்கு சோர்வு ஏற்பட்டதால் தேர்கள் நிலை வருவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டது. மாசி வீதிகளில் பக்தர்களுக்கு நீர், மோர், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், வெண் பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டன.
* அழகருக்காக கிளம்பியது ஆண்டாள் சூடிய மாலை
மதுரை, அழகர்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நாளை நடைபெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மலர்மாலையை அணிந்து செல்வது வழக்கம். விழாவை முன்னிட்டு அழகருக்கு மாலை அனுப்பும் வைபவம் ஆண்டாள் கோயிலில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு அழகருக்கு அணிவிக்கப்படும் பிரமாண்ட மாலையுடன் ஆண்டாள் காட்சியளித்தார்.
பின்பு மாலை, கிளி ஆகியவை கூடையில் எடுத்து வைக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாடவீதிகள் வழியாக யானை முன்னே செல்ல ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மதுரை கிளம்பி சென்றது. ஆண்டாள் சூடிய மாலைக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வரை பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். பின்னர், மதுரை தல்லாகுளம் கூடலழகர் பெருமாள் கோயிலில் வைத்து அழகருக்கு மாலை அணிவிக்கப்படும். இதன்பிறகு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
