இஸ்லாமிய குழந்தையின் பாதுகாவலராக இந்து மதத்தைச் சேர்ந்த தம்பதி நியமனம்: பாதுகாவலர்கள் சட்டம் மதம் சார்ந்தது அல்ல என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: இந்து தம்பதியை இஸ்லாமிய குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலராக நியமித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒரு இந்து தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், அவர்கள் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அவர்களது பக்கத்துவீட்டைச் சேர்ந்து இஸ்லாமிய பெண் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. கணவரை இழந்த நிலையில் அந்தப் பெண் வறுமை காரணமாக குழந்தைகளை முறையாக பராமரிக்க முடியாத நிலையில் இருந்தார்.

இதனால், அவர் தனது மூன்றாவது பெண் குழந்தையை இந்து தம்பதிக்கு தத்துக் கொடுத்தார். இதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், தம்பதியர் இந்துக்கள் என்றும், குழந்தையும், தத்து கொடுப்பவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்து தம்பதியர் தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராம கிருஷ்ணன் ஆகியோர், ‘‘இஸ்லாமிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை, பிறந்தது முதல் இந்து தம்பதியரின் அரவணைப்பிலும், அன்பிலும் வளர்ந்து வருகிறது. அக்குழந்தை அப்பா, அம்மா என்றே அவர்களை அழைக்கிறது. தன்னை பெற்ற தாயை ‘ஆன்ட்டி’ என்று அழைக்கிறது. தனது வறுமை சூழலில் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய இந்து தம்பதியரை பாதுகாவலராக நியமிக்க இஸ்லாமிய பெண்ணும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர்கள் சட்டம் என்பது மதம் சார்ந்தது அல்ல. இதில் குழந்தையின் நலனே மிக முக்கியமானது. இஸ்லாமிய சட்டத்தில் தத்தெடுப்பு முறை நேரடியாக அங்கீகரிக்கப் படாவிட்டாலும், கபாலா என்ற முறையில் குழந்தையின் நிதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொள்ள ஒருவரை நியமிக்க அனுமதி உண்டு. குழந்தையின் நலனுக்காக நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம். இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலராக இந்து மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கபடுகிறார். அக்குழந்தை மேஜர் ஆகும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: