அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு

மதுரை: வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவின் போது ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘2025ம் ஆண்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது, அடையாளம் தெரியாத சிலர் கூட்டத்தில் இருந்த பக்தர்கள் மீது காலணிகளை வீசியுள்ளனர். இது பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் கூடுதல் காவலர்களை நியமித்து, தீவிர கண்காணிப்பு மற்றும் கூட்ட நெரிசலை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாளிதழ்கள் மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

மதுரை கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் முறையான பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சக்திகுமரன், ‘‘மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரம் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார். இதனையடுத்து நீதிபதி, ‘‘7 கிமீ தூரத்திற்கு அதிரடிப்படை போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: