*மக்கள் ஆவலுடன் வாங்கி செல்கின்றனர்
பெரம்பலூர் : கோடை வெப்பத்தின் தாக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு காணப்படும் மாவட்டம் எதுவென சொல்வதென்றால் வேலூரைக் குறிப்பிடுவார்கள். இப்போது வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு போட்டியாக பெரம்பலூர் மாவட்டத்தில் காணும் இடமெங்கும் சாலைகளில் அனல் காற்று வீசி வருவதால் கானல் நீர்தான் கண்களுக்குத் தெரிகிறது.
வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க பெரம்பலூர் நகருக்கு ஏற்கனவே தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு முலாம் பழம் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், இயல்பாக கிடைக்கும் இளநீர் அல்லாமல் நீர்மோர், ஐஸ்கிரீம், ரசாயன குளிர் பானங்கள், சர்பத் போன்றவை சகஜமாக கிடைக்கும் நிலையில், கடந்த சில தினங்களாக பொது மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த நுங்கு விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சங்குப்பேட்டை, ரோவர் வளைவு, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, அரியலூர் சாலை, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை என திரும்புகின்ற திசையெங்கும் நுங்கு விற்பனை சக்கை போடு போடுகிறது. 3 நொங்கு 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதனை நகரவாசிகளும், வெளியூரில் இருந்து நகருக்கு வாகனங்களில் வந்து செல்லும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குறிப்பாக மேட்டுப்பாளையம், வெண்பாவூர், நெய்குப்பை, மங்களமேடு, சித்தளி, பேரளி, அசூர், ஒதியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நொங்கு குலைகுலையாக வெட்டி சாக்குப் பைகளில் மூட்டை மூட்டையாக எடுத்துவந்து விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
