கரூர் மாவட்டத்தில் கடந்து 4 மாதத்தில் 375 பைக் விபத்தில் ஹெல்மெட் அணியாததால் 100 பேர் உயிரிழப்பு

*விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்பி தகவல்

கரூர் : கரூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 375 இரு சக்கர வாகன விபத்தில், 100 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என்றும், எனவே ஹெல்மட் அணிவதை தவிர்க்க வேண்டாம் என்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று உலகம் முழுதும் சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் குறித்த தகுந்த விழிப்புணர் இல்லாத காரணத்தால் சாலை விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஏற்பாட்டின் கீழ் கரூரில் அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள பெட்ரோல் பங்கில் ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்ற விழிப்புணர்வு பிளக்ஸ் பேனரை, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து திறந்து வைத்தார். அதன் பின்னர் காவல் கண்காணிப்பாளர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 375 இரு சக்கர வாகன விபத்துகள் நடந்துள்ளது. அதில் 100 பேர் ஹெல்மெட் அணியாததால் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்ப வேண்டும். கரூர் மாவட்டம் விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்டத்தில் உள்ள 120 பெட்ரோல் பங்குகளில் இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹெல்மெட் என்பது உயிர் காக்கும் கவசமாகும், இது விபத்துக்களில் தலையை பாதுகாத்து, குடும்பத்தின் மகிழ்ச்சியைக் காக்கிறது. ”தலைக்கவசம் உயிர் கவசம்”, ”உயிரைக் காக்க ஹெல்மெட் போடு” மற்றும் ”சின்ன தூரம் தானே, ஹெல்மெட் தேவையில்லை என நினைக்காதீர்கள்” போன்ற வாசகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

மேலும் தலைக்கவசம் உயிர் கவசம் – எமனிடமிருந்து தப்பிக்க! உயிரைக் காக்க ஹெல்மெட் போடு. சின்ன தூரம் தானே என நினைக்காதீர்கள், விபத்து தூரம் பார்த்து வருவதில்லை. வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுங்கள்.

தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யுங்கள். போலீசாருக்காக அல்ல, உங்கள் குடும்பத்திற்காக ஹெல்மெட் அணியுங்கள். பாதுகாப்பான பயணத்திற்கு, தலைக்கவசம் அவசியம். தலைக்கவசம் அணிந்து, ஆபத்தை தவிர்த்து, மகிழ்ச்சியாக வாழுங்கள்.

வாகனத்தை மெதுவாக ஓட்டுங்கள், ஹெல்மெட் அணியுங்கள். உங்கள் தலையைப் பாதுகாக்கவும், வாழ்க்கையை சாலையில் விடாதீர்கள். தலைக்கவசம் அணிவோம். தலைவிதியை மாற்றுவோம். உயிரின் விலை என்ன? – உங்கள் ஹெல்மெட்.

இந்த வாசகங்கள் மக்கள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் ப்ரெண்ட் ஹரி கிரண் பிரசாத் வலியுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஎஸ்பி செல்வராஜ், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் அருண் பிரகாஷ், எஸ்ஐ நடராஜன், தனியார் பெட்ரோல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சூர்ய நாராயணன், பொருளாளர் அருண் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: