பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை அவசியம்

*வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை

தா‌.பழூர் : இன்றைய காலக்கட்டத்தில் பயிர்களுக்கு எவ்வளவு உரங்களிட்டாலும் உற்பத்தியில் தேக்க நிலையே காணப்படுகிறது. இந்த மகசூல் தேக்க நிலைக்கு காரணம் ரசாயன உரங்களையும், இயற்கை உரங்களையும் சரியாக பயன்படுத்தாதது தான்.

இதனை நிவர்த்தி செய்ய ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மிகவும் அவசியமாகும் என அரியலூர் மாவட்ட கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் ஆகியோர் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு வழங்கி உள்ளனர்.

இதில் பயிர் வளர்வதற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தேவையான அளவிலும், சரியான விகிதத்திலும் கொடுத்தால் தான் நமக்கு வளமான மண் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக இரசாயன உரங்களை மண்ணில் இடுவதால் மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு செடி வளர்வதற்கு 16 இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது.
பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இரசாயன உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் எனப் பிரிக்கலாம்.

இரசாயன உரங்களை மட்டும் மண்ணில் இடும்போது ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஊட்டச்சத்துக்கள் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கின்றன. மற்ற சத்துக்களை பயிருக்கு இடாமல் தொடர்ந்து பயிர் செய்வதால், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், சத்துக்களை சரிவிகிதத்தில் இடாத காரணத்தால் மண்ணில் காற்றோட்டம், நீர் வடிதல் மற்றும் பௌதிக தன்மைகள் குறைந்து பயிர் விளைச்சலை பாதிக்கிறது.

எனவே, மேற்கூறிய மூன்று வகையான ஊட்டச்சத்துக்களையும் தேவையான அளவில் பயிருக்கு இடுவதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் ஆகும். நாம் மண்ணில் இடும் அனைத்து வகையான உரங்களையும் மக்கச்செய்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்கச் செய்வது மண்ணில் வாழ்கின்ற நுண்ணுயிர்களாகும்.

உதாரணமாக, யூரியாவில் அமைடு வடிவில் உள்ள தழைச்சத்தினை அமோனியாவாகவும், நைட்ரேட்டாகவும் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றித் தருவது இந்த நுண்ணுயிர்களே. இவை உயிர் வாழ்வதற்கும், அதிக அளவில் உற்பத்தி ஆவதற்கும் நன்கு செயல்படவும் இயற்கை உரங்கள் உணவாக தேவைப்படுகிறது.

இயற்கை உரங்களை இரசாயன உரங்களுடன் கலந்து பயன்படுத்தும் போது அவற்றின் பலன் முழுமையாக செடிகளுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, இயற்கை உரங்களை மண்ணில் இடும்போது அதனுடன் கலந்து இரசாயன உரங்களை இடக்கூடாது.

முதலில் நாம், எவை இயற்கை உரங்கள் என்று தெரிந்து கொள்வோம். தொழு உரம், கம்போஸ்ட், மண்புழு உரம், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள், சாக்கடை கழிவு மற்றும் ஆலை கழிவுகளாகிய தென்னை நார்க்கழிவு மற்றும் பிரஸ்மட் ஆகியன முக்கியமான இயற்கை உரங்களாகும். பண்ணைக் கழிவுகள், கால்நடை மற்றும் வீட்டுக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதே தொழு உரம் ஆகும்.

நகரங்களிலும் மற்ற ஊர்களிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை மக்க வைத்துத் தயாரிக்கப்படுவதே கம்போஸ்ட் உரம் ஆகும். மண்புழுக்களின் செயல்பாட்டாலும், அதன் கழிவுகளாலும் உற்பத்தி செய்யப்படுவதே மண்புழு உரமாகும். இயற்கை உரங்களில் பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் அதிக அளவில் உள்ளன. இயற்கை உரங்களை ஒரு ஹெக்டருக்கு 2 டன் வீதம் பரிந்துரை செய்யப்படுகிறது.

வேர் முடிச்சுகளில் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துவது பசுந்தாள் உரமாகும். எடுத்துக்காட்டு தக்கைப் பூண்டு, சணப்பயிர், கொளுஞ்சி, மணிலா அகத்தி மற்றும் பிலிபெசரா. வேலி, வரப்பு, தரிசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வளரும் மரங்களில் இருந்து பசுந்தழைகளைச் சேகரித்து உரமாகப் பயன்படுத்துவதே பசுந்தழை உரமாகும். எடுத்துக்காட்டு; புங்கம், கிளிசிடியா, வேம்பு, பூவரசு, எருக்கு, ஆவாரை, சௌண்டல் ஆகும்.

நுண்ணுயிர் உரங்கள்: நாம் அளிக்கும் இரசாயன உரத்தில் உள்ள தழைச்சத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும், தேவையற்ற உரச் செலவுகளைக் குறைக்கவும் இந்த நுண்ணுயிர் உரங்கள் தேவைப்படுகின்றன. மேலும், இந்த நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் தழைச் சத்து இடும் அளவை நாம் குறைத்துக் கொள்ளலாம். அதாவது, அதிக அளவு யூரியா இடுவதை இந்த நுண்ணுயிர் உரங்களை இடுவதன் மூலம் தவிர்க்கலாம்.

வளி மண்டலத்தில் காற்றோடு கலந்திருக்கும் தழைச்சத்தை நுண்ணுயிர் உரங்கள் கிரகித்து அவற்றை மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்குப் பயன்படும் வகையில் செய்கிறது.
எடுத்துக்காட்டு ரைசோபியம், அஸோஸ்பைரில்லம், அஸிட்டோ பாக்டர், நீலப்பச்சை பாசி மற்றும் அஸோலா. மேலும், மண்ணில் கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தை கரைத்து பயிருக்குக் கொடுக்கும் திறனுடையது இந்த நுண்ணுயிர் உரங்கள்.

எடுத்துக்காட்டு பாஸ்போ பாக்டீரியா. இதனை மக்கிய எருவுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என இட வேண்டும்.மைக்கோரைசா என்ற பூஞ்சாணம் மணிச்சத்துக்களை கிரகித்து பயிரின் வேர்களுக்கு கிடைக்கச் செய்வதுடன் பயிரின் மகசூலையும் அதிகரிக்கச் செய்கிறது. அதிக அளவு மணிச்சத்து உரமிடுவதையும் நம்மால் தவிர்க்க முடிகிறது.

விவசாயம் செய்வதினால் நஷ்டம் ஏற்படுகிறது என்ற கருத்து மிகவும் தவறானது. ஏனெனில் தேவையாவற்றை தேவையான நேரங்களில் தேவையான அளவு பயன்படுத்தினால் விவசாயத்தில் அதிக அளவு மகசூல் பெற முடியும்.

எனவே, அதிக அளவு செலவு செய்து தேவையற்ற உரங்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகத்தைப் பின்பற்றி நமக்கு மட்டுமல்லாமல் நம் வருங்கால சந்ததியினருக்கும் வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: