*குவிண்டால் ரூ.1900க்கு விற்பனை
*விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் : தஞ்சாவூரை அடுத்த திருமலை சமுத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை சாலையில் வைத்து காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் பெருகி வரும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான தேவையால் கால்நடை வளர்ப்பை அதிகரித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைகளும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. இதனால் அடர் தீவனங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.அடர் தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. இதனால் மக்காச்சோள சாகுபடியில் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக மானாவரி பகுதியில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை மேற்கொள்கின்றனர். காரணம் குறைந்த தண்ணீர் குறைவான பராமரிப்பு என்ற அளவில் மக்காச்சோள சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருசில பகுதிகளில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடியும் நடந்து வருகிறது. இதற்காக விற்பனையும் உடனே முடிந்து விடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தஞ்சையின் முக்கிய பயிராக நெல் இருந்து வருகிறது. நெல்லுக்கு அடுத்தப்படியாக சோளம், எள், வெற்றிலை, வாழை, கரும்பு, கீரை, பயிர், தேங்காய் உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரம், குருவாடிபட்டி, வல்லம், சாலியமங்கலம், நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர்.
இந்தப் பயிருக்கு அதிக அளவில் தண்ணீர் தேவை இல்லாததால் மேற்கண்ட கிராமங்களில் சாகுபடி அதிக அளவு செய்திருந்தனர். சோளம் பயிர் நன்கு வளர்ந்து பூ பூத்து சோளத்தையும் வெளியில் பெரிய அளவில் கொடுத்து இருந்தது. இந்த சோளம் முதிர்வடைந்த பின் தற்போது விவசாயிகள் தொடர்ந்து அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்காச்சோளம் 4 மாத கால சாகுபடி பயிராகும். தற்போது அறுவடை மேற்கண்ட கிராமங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் குறைவாக உள்ளதாகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றன. அறுவடை செய்த இடத்திற்கே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். உடனே பணமும் கைக்கு வந்து விடுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில்; மக்காச்சோளம் அறுவடை முடிந்து காயவைக்கும் இடத்திலேயே வந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து விடுகின்றனர். சில சமயம் விலை இல்லாமல் அவ்வப்போது ஏற்ற இறக்கமாக இருக்கும். இருப்பினும் உடனுக்குடன் பணம் கிடைத்து விடுகிறது. இந்த ஆண்டு செலவு போக குறைந்த அளவில் லாபம் கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.
ஆனால் இந்த முறை நல்ல விலைக்கு மக்காச்சோளம் விற்பனை நடைபெறவில்லை. விதை சோளம் ரூபாய் 550 க்கு வாங்கி தற்போது ஒரு குவின்டால் ரூபாய் 1900க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் வாங்குவது போல் மக்காச்சோளத்தையும் வாங்கினால் எங்களுக்கு லாபம் கிடைக்கும். அதற்கு தமிழக அரசு முன்னுரை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
