திண்டிவனத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

* 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

* 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மார்த்தாண்டத்திலிருந்து சென்னை நோக்கி அரசு எஸ்.சி.டி.சி சொகுசு பேருந்து நேற்று முன் தினம் இரவு சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றது. பேருந்தை மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த பென்சிகர் (51) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்நிலையில் பேருந்து நேற்று காலை 5 மணி அளவில் திண்டிவனம் சலவாதி திருவண்ணாமலை சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த பேருந்து நான்கு முனை சந்திப்பு அருகே வரும்போது திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து புதுவை நோக்கி சென்ற ஒரு லாரி திடீரென சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மீது லேசாக மோதியது.

இதில் அரசு பேருந்து நிலைத்தடுமாறி சென்டர் மீடியனில் ஏறி எதிர் திசையில் சென்னை செல்லும் சாலையில் சென்றது. அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த மற்றொரு லாரி அரசு பேருந்து மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 42க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டிவனம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சென்னையில் இருந்து புதுவை நோக்கி தைல மரக்கட்டைகள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவர் திண்டிவனம் அடுத்த கிளியனூரை சேர்ந்த சக்திவேல்(25) விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் லாரி டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த விபத்தால் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த திண்டிவனம் மற்றும் ரோசணை போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான ஆந்திரா பதிவு எண் கொண்ட திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து புதுவை நோக்கி சென்ற லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: