மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இல்லோடு கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருபவர் துரைமுருகன். இவரது சூளையில் வேலை செய்யும் இல்லோடு பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர் மதன் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மதன் டிராக்டரில் செங்கல்லை ஏற்றிக் கொண்டு சூளையில் இறக்கிவிட்டு மீண்டும் ஏரிக்கரை பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளைஞர் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரிக்கரையில் டிராக்டர் கவிழ்ந்து பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
