கோமுகி அணையின் மேல்பகுதியில் உடைந்த சிலைகளை சீரமைத்து தரவேண்டும்

*சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சின்னசேலம் : கச்சிராயபாளையம் கோமுகி அணையின் மேல்பகுதியில் உள்ள உடைந்துபோன சிலைகளை சீரமைத்து தரவேண்டும் என்று சுற்றுலாத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கல்வராயன்மலை அடிவாரத்தில் கச்சிராயபாளையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கோமுகி அணை உள்ளது. இந்த அணை காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டும் பணி தொடங்கப்பட்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்டது.

கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 900 ஏக்கர் ஆகும். மேலும் மலையின் அடிவாரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பெரிய சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. அதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சருக்குபலகை, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் இருந்தன. காலப்போக்கில் அனைத்தும் சேதமடைந்துவிட்டன.

தற்போது ரூ.3 கோடி நிதி ஒதுக்கி கோமுகி பூங்கா சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அணையின் மேல்பகுதியில் உள்ள நேரு குதிரையில் அமர்ந்துள்ள சிலைகள், படிக்கட்டு வழியாக ஏறும் இடத்தில் குகையில் இருந்து புலி வருவது போல இருந்த சிலை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் காளை மாடு சிலை, சுற்றுமெத்தை ஆகிய பகுதியும் உடைந்து காணப்படுகிறது.

அதேபோல அணையின் உச்சியில் உள்ள இயேசு சிலையும் உடைந்து காணப்படுகிறது. இதனால் கோமுகி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. கோமுகி அணையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த அணை கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆனதாலும், பூங்கா பராமரிப்பு பணிகள் சரிவர நடக்காததாலும், விளையாட்டு சாதனங்கள், மின் விளக்குகள் உடைந்து பழுதாகி உள்ளன.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. கோமுகி அணை பூங்காவை நவீனமயமாக்க வேண்டும். படகு சவாரி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் கோமுகி அணையின் மேல்பகுதியில் அணையின் வரலாற்று புராதன சின்னமாக விளங்கும் நேரு சிலை போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சுற்றுலாத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: