×

கரக கலைஞர்கள் கண்ணியமான உடை அணிந்து ஆட வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: கரகாட்ட கலைஞர்கள் கண்ணியமான உடைகளை அணிந்து ஆட வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்த மேலகரத்தைச் சேர்ந்த கணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் நடத்த அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு காவல்துறையிடம் மனு அளித்திருந்தேன். காவல்துறை இதற்கு அனுமதி மறுத்து விட்டனர். கரகாட்டம் நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்தார். அரசு வக்கீல் மனோஜ் ஆஜராகி, ‘‘சமீபகாலமாக கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமான ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது’’ என்றார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கரகாட்டம் என்பது தமிழ் பண்பாட்டின் சிறந்த நடன கலை. கரகாட்டம் என அழைக்கப்படும் இந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனம் தமிழ்நாட்டில் பிரபலமானது. இது மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடப்படுகிறது. இந்த நடனத்தின் சிறப்பம்சமே, நடனக் கலைஞர் தனது தலையில் பானைகள் அல்லது செம்புகளைச் சுமந்து கொண்டு, கீழே விழாமல் ஆடும் சிக்கலான உடல் அசைவுகளாகும். இதற்கு மிகப்பெரிய திறமையும், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவைப்படுகிறது. கரகாட்டம் ஆடும் கலைஞர்கள், புகழ்பெற்ற ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வருவது போன்ற கண்ணியமான உடைகளை அணிந்து ஆட வேண்டும். மனுதாரர் மீண்டும் ஒருமுறை காவல்துறையிடம் புதிய மனுவை அளிக்க வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்புடன் குறிப்பிட்ட நேரத்தில் கரகாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

Tags : High ,Madurai ,Karaka ,Ganesan ,Melagaram ,Courtallam, Tenkasi district ,Court ,Muppidathi ,Amman… ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...