×

4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம் புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநில மதுவுக்கு பொருந்தாது: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தனி பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற விதி புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் மது பானத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்ததையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நான்கரை லிட்டர் வரை மதுபானம் சொந்த பயன்பாட்டிற்காக கொண்டு வரலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள “நான்கரை லிட்டர்” என்ற வரம்பு குறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. மதுபானங்களை 4.5 லிட்டருக்கு குறைவாக வைத்திருப்பதற்கான விலக்கு என்பது டாஸ்மாக் மற்றும் உரிமம் பெற்ற கடைகள் மூலம் அல்லது அரசின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசு அங்கீகரிக்காத பிற மாநில மதுபானங்கள், மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே, இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் பொருட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட நீதிபதி நிர்மல் குமார் நாளை (இன்று) விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,
× RELATED கோடை விழாவை முன்னிட்டு மே 1 முதல்...