×

2025-26ம் நிதியாண்டில் ரூ.1,290 கோடி சரக்கு வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் 2025-26ம் நிதியாண்டில் ரூ.1,290 கோடி சரக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 2025-26ம் நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.1,289.78 கோடி சரக்கு வருவாய் ஈட்டியுள்ளதோடு, பல புதிய சரக்கு போக்குவரத்து சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில், சென்னை ஜவஹர் டாக் துறைமுகத்திலிருந்து பொன்மலை (கோல்டன் ராக் – பாய்லர் பிளான்ட்) பகுதிக்கு முதன்முறையாக இரும்பு குழாய்கள் கொண்டு செல்லப்பட்டன. இது சென்னை கோட்டத்தின் சரக்கு போக்குவரத்து பட்டியலில் ஒரு முக்கியச் சேர்க்கையாக அமைந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், மின்சார ஆட்டோக்களின் சரக்கு போக்குவரத்தை சென்னை கோட்டம் தொடங்கியது. ‘மான்ட்ரா எலக்ட்ரிக்’ ஆட்டோக்கள் தடாவிலிருந்து ரங்காபானிக்கும், ‘மஹிந்திரா எலக்ட்ரிக்’ ஆட்டோக்கள் ஜோலார்பேட்டையிலிருந்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கீழ் உள்ள சால்சாப்ரா மற்றும் ஜிரானியா நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மேலும், தனது சரக்கு போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் விதமாக, கொருக்குப்பேட்டை சரக்கு முனையத்திலிருந்து டெல்லி கோட்டத்தில் உள்ள நோலி பகுதிக்கு மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கான கொள்கலன் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை கோட்டம் இழந்த சில முக்கிய சரக்கு போக்குவரத்து சேவைகளையும் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. சிங்கபெருமாள்கோவிலிலிருந்து பரூக்நகருக்கு 430 லாரிகள் ‘ரயில் மீது லாரி’ சேவை மூலம் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல், 14 மாத இடைவெளிக்குப் பிறகு, காமராஜர் துறைமுக முனையத்திலிருந்து தோரணகல்லு மற்றும் மேச்சேரி ரோடு உள்ளிட்ட இடங்களுக்கு சுண்ணாம்புக்கல் சரக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் சென்னை கோட்டத்தின் இரண்டாவது ‘கதி சக்தி மல்டி மாடல் சரக்கு முனையம்’ பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எஸ்ஐசிஏஎல் மல்டிமாடல் ரயில் டிரான்ஸ்போர்ட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த முனையத்திலிருந்து, 45 பி.எல்.சி.ஏ வேகன்கள் கொண்ட முதல் சரக்கு ரயில் பொன்னேரியிலிருந்து தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள மகாவீர் பெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் தனியார் சரக்கு முனையத்திற்கு 1,389 கி.மீ தூரத்தைக் கடந்து சென்றது. இந்த சாதனைகள் அனைத்தும் சென்னை கோட்டம் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தவும், புதிய வகை சரக்குகளை கையாளவும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நவீன தீர்வுகளைச் செயல்படுத்தவும் எடுத்து வரும் தொடர் முயற்சிகளைப் பிரதிபலிக்கின்றன. தொழில் வளர்ச்சி மற்றும் நிலையான போக்குவரத்து சேவைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சென்னை கோட்டம் உறுதியுடன் உள்ளது.

Tags : Chennai Railway Division ,Southern Railway ,Chennai ,Chennai Division ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...