×

தமிழகத்தில் இன்று முதல் மழை: வெப்பம் படிப்படியாக குறையும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் தெற்கு காற்று, மேற்கு நோக்கி பயணித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை அடுத்து தெலங்கானா, கர்நாடகா உள்பகுதிக்கு செல்லும் வாய்ப்புள்ளது. அத்துடன் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தம் காணப்படுகிறது.

உயர் அழுத்தம் மற்றும் தென்திசையின் நீராவிக் காற்றும் இணைந்து கடலோர மாவட்டங்களில் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் நேற்று காலை லேசான மழை பெய்தது. இந்த மேகம் நேற்று மதியத்துக்கு பிறகு டெல்டாவில் இருந்து விலகிச் சென்று தெற்கு கடலோரம் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதி தொடங்கி மேகம் உருவாகி லேசான மழை பெய்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கன்னியாகுமரி, தென்காசியிலும் நேற்று லேசான மழை தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்தது.மழை பெய்ய தொடங்க உள்ளதால் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையில் குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், ஈரோடு 104 டிகிரி, கரூர், மதுரை, திருப்பத்தூர் 102 டிகிரி வெயில் நிலவியது.

இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு தெலங்கானா முதல் குமரிக் கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை நேற்று பெய்துள்ளது. இது இன்றும் நீடிக்கும். பின்னர் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை கனமழை பெய்யும். 3, 4ம் தேதியின் மிதமான மழை பெய்யும்.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...