×

அதிகாரிகள் நியமன விவகாரம் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விளக்கம்

சென்னை: நகராட்சி நிர்வாக துறையில் 2538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிபுத் துறைக்கு எதிராக இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசும், அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்கப்பட வேண்டும் என்பதால் விசாரணை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கப்படுகிறது என்றனர். அப்போது கே.என்.நேரு தரப்பு வழக்கறிஞர், அதுவரை வழக்குப்பதிவு செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தமிழக அரசு மற்றும் கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4வது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Minister ,K.N. Nehru ,Court ,Chennai ,The Enforcement Directorate ,Tamil Nadu DGP ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...