×

தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் தமிழகம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: ஒன்றிய புள்ளியியல் துறை தகவல்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தொடர் சாதனை

சென்னை: தமிழகம் 2024-25ம் நிதியாண்டில் 11.19 சதவீதம் வளர்ச்சியை கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் 10.83 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2010-11ல் முதல்வராக கலைஞர் இருந்தபோது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 13.12 சதவீதமாக இருந்தது.

இதை தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் 2025ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்து இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இது, இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூறி இருந்தார். மேலும் அவர் கூறும்போது, இது தனிப்பட்ட ஸ்டாலின் வெற்றி அல்ல, நம் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த கூட்டு வெற்றி. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் அடித்தனம். இளைஞர்கள் முன்னேற வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுதான் திமுக அரசின் முதன்மை பணியாக இருக்கும். அதனால்தான் பல்வேறு திட்டங்களின் வழியாக பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

கடந்த 4 ஆண்டுகளில் தேர்வாணையம், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக 1.8 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல, திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம், ‘நான் முதல்வன்’ திட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 6.41 லட்சம் பேர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நியமனங்கள் பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்’ என்றார். இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பொருளாதார வளர்ச்சியில் 10.83 சதவீதம் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வந்த புதிய பல திட்டங்களின் காரணமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் சிறப்பான பல சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் பெருமையை நிலைநாட்டியுள்ளது. ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை, நிதி ஆயோக் ஆய்வறிக்கை முதலான பல்வேறு ஆய்வறிக்கைகளே தமிழ்நாட்டின் சாதனைகளை உறுதிப்படுத்தியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் தமிழ்நாட்டின் வலுவான கொள்கைகளும் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி வீரநடை போடுகிறது என்பது புலப்படுத்துகின்றன. சென்னை பொருளாதார பள்ளியின் (மெட்ராஸ் ஸ்கூல் ஒப் எகனாமிக்ஸ்) முன்னாள் இயக்குநரும் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசகருமான கே.ஆர்.சண்முகம், தமிழ்நாடு அரசின் இந்த வளர்ச்சி பாதை மாநிலத்தின் வலுவான உள்கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடவும், தேசிய சராசரியைவிடவும் தமிழ்நாடு அடைந்துள்ள இந்த மாபெரும் சாதனைக்கு தொழில் துறை வளர்ச்சி 10 சதவீதமாகவும், சேவைத்துறை வளர்ச்சி 8.5 சதவீதமாகவும், உயர்ந்துள்ளதுடன் முதன்மை துறையாகிய வேளாண் துறை முந்தைய ஆண்டுகளைவிட மேலும் அதிகமாக 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதும் முக்கிய காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன. இது மட்டும் அல்ல; தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ல் ரூ.31.19 லட்சம் கோடி என்பது 2025-26ம் ஆண்டில் ரூ.35.29 லட்சம் கோடி என்று உயர்ந்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 4.08 லட்சம் ரூபாய் என உயர்ந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சி கண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.

* தமிழ்நாடு என்றாலே சாதனை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைப் பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல் சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி. நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உயர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* சாதாரண வளர்ச்சி அல்ல
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை தமிழ்நாடு முதல்வர் தன் கையில் எடுத்துள்ளார். இந்த வளர்ச்சி அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் திராவிட நாயகர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இது சாதாரண வளர்ச்சி அல்ல திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது, இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil ,Nadu ,Union Statistics Department ,DMK government ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கோடை விழாவை முன்னிட்டு மே 1 முதல்...