- சித்திராய் திருவிழா
- மீனாட்சி-சுந்தரேசுவரர் திருகல்யாணம்
- மதுரை
- மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருகல்யாணம்
- மதுரை மீனாட்சி
- அம்மன்
- திருக்கல்யாணம்
- வடக்கு
- மேற்கு ஆதி
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. திருக்கல்யாணத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.35 லட்சம் செலவில், 10 டன் எடையுள்ள பல வண்ண பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. முருகப்பெருமான் தெய்வானையுடனும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய்ப் பெருமாள், திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவே புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயில் வந்திருந்தனர். நேற்று அதிகாலை தங்கக்கவசத்துடன், சிவப்பு நிற பட்டுச்சேலை அணிவித்து, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிவிக்கப்பட்டு மணப்பெண் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் ஜொலித்தார். சுந்தரேஸ்வரருக்கு வெண்பட்டு, பிரியாவிடைக்கு பச்சைப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்திற்கு முன்னதாக, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரர் காசி யாத்திரை செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டு, அம்மனும், சுந்தரேஸ்வரரும் கோயிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினர். மேற்கு கோபுர வாசலில் மாப்பிள்ளையான சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை நடத்தப்பட்டு, மணமேடையில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மேடைக்கு மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் அழைத்து வரப்பட்டு, மணமகளின் இடதுபுறம் பவளக்கனிவாய்ப் பெருமாள், வலப்புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
காலை 7.45 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்புக் கட்டும் நிகழ்ச்சி, தொடர்ந்து சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. வெண்பட்டினாலான பரிவட்டம் சுந்தரேஸ்வரருக்கும், பச்சை பட்டுப்புடவையால் ஆன பரிவட்டம் அம்மனுக்கும் கட்டப்பட்டன. தொடர்ந்து பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேஸ்வரருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து சுந்தரேஸ்வரராக செந்தில் பட்டர், மீனாட்சியாக பாண்டித்துரை பட்டர் மாலை மாற்றிக் கொண்டனர்.
பின் இருவரும் மும்முறை வைரக்கற்கள் பதித்த தங்கத் தாலியை பக்தர்கள் முன்பு எடுத்துக் காட்ட, காலை 8.54 மணிக்கு மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்பகுதியிலும், கோயில் வளாகத்திலும் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருமணக் கோலத்தில் இருந்த சுவாமி – அம்மனை தரிசித்து வணங்கியதுடன், பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து, சுந்தரேஸ்வரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனம், தங்கச் செம்பில் பன்னீர் தெளிக்கப்பட்டன. தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சமயச் சடங்கு நிகழ்வும் நடத்தப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும், மேடையில் மணமக்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன் – தெய்வானை, பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர்.
திருக்கல்யாணத்தையொட்டி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் மொய் காணிக்கையாக ரூ.50 மற்றும் ரூ.100 வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மொய் காணிக்கை செலுத்தினர். டிஜிட்டல் முறையிலும் மொய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6.30 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது.
