×

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் தூக்கு தண்டனை வாழ்நாள் சிறையாக மாற்றம்: ஐகோர்ட்கிளை உத்தரவு

மதுரை: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தையின் தூக்கு தண்டனையை வாழ்நாள் சிறை தண்டனையாக மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி, தனது 14 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். புகாரின்படி வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம், பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே, இத்தகைய கொடூர இழிசெயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத மிகப் பெரிய கொடூரக் குற்றமாகும்.

இந்தக் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக வள்ளியூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தண்டனை பெற்ற விவசாயி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் என்.ஆனந்த்வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன்முகம்மது ஜின்னா ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவரின் குற்றத்தை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இதனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடத் தேவையில்லை. அதே நேரத்தில் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. போக்சோ சட்டத் திருத்தத்தில் கடுமையான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்க அனுமதித்துள்ளது. இருப்பினும் இது அரசியலமைப்புரீதியான வரம்புகள் மற்றும் மரண தண்டனை விதிக்கும் நீதித்துறையின் கொள்கைகளுக்கு உட்பட்டது.

சட்டப்படி இதுபோன்ற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனையாக நீண்டு, அரிதிலும் அரிதான சம்பவங்களில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இந்த போக்சோ வழக்குகளில் தண்டனை படிநிலையில் தூக்கு தண்டனை இறுதி நிலையாக உள்ளது. இதனால் தூக்கு தண்டனை விதிப்பது இயந்திரத்தனமாகவோ அல்லது வழக்கமானதாகவோ இருக்கக்கூடாது. மாற்றுத் தண்டனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி போதுமானதாக இல்லாத மிக கடுமையான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே அது ஒதுக்கப்பட வேண்டும்.

தூக்கு தண்டனை என்பது இறுதியானது, உடனடியானது மற்றும் மாற்ற முடியாதது. அது உயிரை மட்டுமல்ல, மனம் திரும்புதல், வருத்தம் அல்லது தார்மீக மாற்றத்திற்கான வாய்ப்பையும் அணைத்து விடுகிறது. இதற்கு மாறாக வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை என்பது ஒரு உயிருள்ள தண்டனை, கடுமையான தண்டனையாகும். விசாரணை நீதிமன்றம் உணர்ச்சி, மனநிலை மற்றும் குற்றத்தின் கொடூரம் காரணமாக தூக்கு தண்டனை விதித்துள்ளது. அந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்கப்படுகிறது. அவர் இயற்கையாக இறக்கும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அவருக்கு முன்விடுதலை, தண்டனை குறைப்பு உரிமை கிடையாது.
இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags : iCourtville ,Madurai ,Icourt branch ,Nella district ,
× RELATED 4.5 லிட்டர் விலக்கு தமிழக அரசு விளக்கம்...