நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்குமுன் புறப்பட்ட சென்னை ரயிலை நிறுத்தி போராட்டம்: 1 மணி நேரம் தாமதம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் கிளம்பிய ரயிலை நிறுத்தி, போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30க்கு புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

நேற்று முன்தினம் இரவு 8.36க்கு இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. தேர்தலுக்காக வாக்களிக்க வந்தவர்கள், விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் இந்த ரயிலுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். வழக்கமாக இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 1 வது பிளாட்பாரத்தில் தான் வந்து நிற்கும்.

ஆனால் நேற்று முன்தினம் இந்த ரயில் இரவு 8.50 மணியளவில் 2 வது பிளாட்பாரத்துக்கு வந்தது. ஆனால் முன் பதிவு பெட்டிகளில் பெரும்பாலான பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பவில்லை. இதனால் பயணிகள் ரயிலில் ஏற மிகுந்த சிரமப்பட்டனர். திறந்திருந்த பெட்டிகளில் முண்டியடித்து ஏறினர். வழக்கமாக 5 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் 3 நிமிடத்திலேயே புறப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நூற்றுக்கணக்கான பயணிகள் ஏற முடியாமல் தவித்த நிலையில். ரயிலில் ஏறி இருந்த சிலர் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து ரயில் நின்றது.

இதையடுத்து முன் கூட்டியே இயக்கிய ரயில் லைபட் மீது நடவடிக்கை எடுக்க கோரி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். வழக்கமாக ரயில் சுத்தம் செய்து முடித்து கிளம்பும்போது ரயில் பெட்டிகளை பரிசோதனை செய்து கதவுகளை முறையாக திறந்து வைக்க வேண்டும். ஆனால் ரயில் ெபட்டி கதவுகளை முறையாக திறக்காததால், பயணிகள் ஏற முடிய வில்லை. இந்த பிரச்னை இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பயணிகள் போராட்டத்ைத கைவிட்டு ரயிலில் ஏறினர். இதனால், சுமார் 1 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

Related Stories: