ராயல்சை மீண்டும் சாய்த்து 3வது இடத்தில் சன்ரைசர்ஸ்; துணிவு உள்ளவர்களுக்கே அதிர்ஷ்டம் துணை நிற்கும்: ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி

 

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 36வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் குவித்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 37 பந்தில் 5 பவுண்டரி, 12 சிக்சருடன் 103, துருவ் ஜூரல் 35 பந்தில் 51, டோனோவன் ஃபெரைரா 33 ரன் அடித்தனர்.
பின்னர் களம்இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட் 6 ரன்னில் வெளியேற அபிஷேக்சர்மா 29 பந்தில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 57, இஷான் கிஷன் 31 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன் விளாசினர். 2வது விக்கெட்டிற்கு இருவரும் 132 ரன் குவித்தனர். பின்னர் வந்த கிளாசென் 29, நிதிஷ்குமார் ரெட்டி 36 ரன் அடித்து அவுட் ஆகினர். 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

8வது போட்டியில் 5வது வெற்றியுடன் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் 3வது தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே நடப்பு சீசனில் கடந்த 13ம் தேதி ஐதராபாத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்த சன்ரைசர்ஸ் நேற்று 2வது முறையாக வென்றது. இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் சன் ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: “மிகவும் மகிழ்ச்சி. முதல் ஆட்டம் எப்படி வரும் என்று ஒருபோதும் உறுதியாகத் தெரியாது. 10 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது நான் அதை நன்றாகக் கணிக்கிறேன். பிரபுல் செய்தது போல, 1 அல்லது 2 மோசமான ஓவர்கள் அமைந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எங்களிடம் பந்துவீச்சாளர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் ஒரு நல்ல மாற்று ஆட்டக்காரர்கள் குழு உள்ளது. உண்மையிலேயே ஒரு அருமையான வெற்றி’’ என்றார்.

ஆட்டநாயகன் இஷான்கிஷன் கூறியதாவது: இங்கு பேட்டிங் செய்வதற்கு மிகவும் நல்ல பிட்ச் என உணர்ந்தேன். எதிரணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சித்தோம், அதைச் செய்ய முடிந்தது. 7 போட்டிகளில் அணியை வழிநடத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கம்மின்ஸ் அணிக்குள் வந்து எங்களுக்குக் கூடுதல் பந்துவீச்சு பலத்தைக் கொடுத்துள்ளார். எப்படியிருந்தாலும், அவர் அணிக்குள் வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன். நான் கேப்டன் பணியை விட பேட்டிங், விக்கெட் கீப்பிங் பற்றித்தான் அதிகம் யோசித்துக் கொண்டிருந்தேன், என்றார்.

தான் சந்தித்த ஆர்ச்சரின் முதல் பந்தில் சிக்சர் அடித்தது குறித்த கேள்விக்கு, நான் எதிர்பார்த்ததை விட வேகமாக, சற்று அதிக பவுன்சராக இருந்தது. ஆனாலும், அதில் 6 ரன் எடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. சில நேரங்களில், துணிவுள்ளவர்களுக்கே அதிர்ஷ்டம் துணை நிற்கும் என நினைக்கிறேன். எனக்கும் அபிஷேக்கிற்கும் நல்ல பார்ட்னர் ஷிப் கிடைத்தது. அது எங்கள் அணிக்கு உதவியது, என்றார். சமீபத்தில் ஆட்டங்களில் இதுதான் எங்கள் சிறந்த இன்னிங்சா என கேட்டபோது, இல்லை, எனது சிறந்த ஆட்டம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கிறேன், என இஷான் கிஷன்’’ கூறினார்.

 

Related Stories: