சில்லிபாயிண்ட்…

* துப்பாக்கி சுடுதல் வன்ஷிகாவுக்கு தங்கம்
கெய்ரோ: எகிப்தின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. 50 மீட்டர் மகளிர் பிரிவு ரைபிள் 3 நிலை போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி கெய்க்வாட் பங்கேற்றார். இறுதிப் போட்டியில், தார்யா சுப்ரிஸ் உடன் மோதிய பிரச்சி, 354.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வன்ஷிகா சவுத்ரி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை செஜல் காம்ப்ளே 2ம் இடம் பிடித்தார்.

* அபய் சிங் அமர்க்களம் காலிறுதிக்கு முன்னேற்றம்
புதுடெல்லி: கிராஸ்ஹாப்பர் கோப்பை ஸ்குவாஷ் காலிறுதிப் போட்டிக்கு, இந்திய நட்சத்திர வீரர் அபய் சிங் முன்னேறி உள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் பிஎஸ்ஏ தங்க நிலை போட்டியாக, கிராஸ்ஹாப்பர் கோப்பை ஸ்குவாஷ் நடந்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த முன்னணி வீரர் அபய் சிங் பங்கேற்று ஆடி வருகிறார். உலகளவில் 24ம் நிலை வீரரான அபய் சிங், முதல் சுற்று போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் டேவிட் பெர்னெட்டை எதிர்கொண்டு, 11-9, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் எகிப்தை சேர்ந்த, உலகின் 13ம் நிலை வீரர் அலி அபோ எலெய்னென் உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அபய், 12-10, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இம்மாத துவக்கத்தில், எகிப்தில் நடந்த எல் கவுனா ஓபன் ஸ்குவாஷ் போட்டியிலும் எலெய்னெனை, அபய் சிங் வீழ்த்தி இருந்தார். அபய் சிங், காலிறுதிச் சுற்று போட்டியில் எகிப்தை சேர்ந்த, உலகின் 4ம் நிலை வீரர் கரீம் கவாட் உடன் மோதவுள்ளார்.

* ஐஎஸ்எல் கால்பந்து ஜாம்ஷெட்பூர் எப்சியுடன் சென்னை இன்று மோதல்
ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று, சென்னையின் எப்சி – ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மோகன் பகான் அணி, 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 20 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சென்னையின் எப்சி அணி, 9 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகள் பெற்று, 9 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், 6ம் இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் எப்சி அணியுடன், ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி அணி மோதவுள்ளது. இவ்விரு அணிகள் இடையே, இதுவரை 16 போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில் சென்னை 8லும், ஜாம்ஷெட்பூர் 3லும் வென்றுள்ளன. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

Related Stories: