புதுடெல்லி: ஐபிஎல் தொடரின் 35வது போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது. அதில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணியின் துவக்க வீரர் பதும் நிஸங்கா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இணை சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா இணை, பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த இணை, 96 பந்துகளில் 220 ரன்கள் குவித்தபோது, 2வது விக்கெட்டாக நிதிஷ் ராணா (44 பந்து, 4 சிக்சர், 11 பவுண்டரி, 91 ரன்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல் 67 பந்துகளில் 152 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி, 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது.
அதையடுத்து, 265 ரன் வெற்றி இலக்குடன் பஞ்சாப் துவக்க வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். துவக்கம் முதல் வெளுத்து வாங்கிய இந்த இணை 6.5 ஓவரில் 126 ரன்கள் குவித்திருந்த நிலையில், பிரியன்ஸ் (43 ரன்) ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் வீசிய 8வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் (26 பந்து, 5 சிக்சர், 9 பவுண்டரி, 76 ரன்) அவுட்டானார். பின் களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், 36 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 71 ரன் விளாசி களத்தில் இருந்தார். 18.5 ஓவரில் பஞ்சாப் 4 விக்கெட் மட்டுமே இழந்து 265 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில், சேஸிங்கில் புதிய சாதனையுடன் மெகா வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் உச்சபட்சமாக 529 ரன்கள் குவித்த சாதனையும் நேற்று அரங்கேறியது.
* ராகுல் பேட் பிடிச்சா ராங்கா போனதில்லே: 67 பந்துகள், 9 சிக்சர், 16 பவுண்டரி, 152 ரன்கள்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா இணை சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 96 பந்துகளில் 220 ரன்கள் வெளுத்தனர். நடப்பு தொடரில், இது, உச்சபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இதற்கு முன், கடந்த 2016ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக, விராட் கோஹ்லி, ஏபி டிவிலியர்ஸ் இணை சேர்ந்து, 2வது விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தது, ஐபிஎல்லில் உச்சபட்ச பார்ட்னர்ஷிப் சாதனையாக தொடர்கிறது. இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை, 10 ரன்களில் ராகுல், நிதிஷ் இணை தவறவிட்டது.
இருப்பினும், நடப்பு தொடரில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். அவர், 67 பந்துகளில் 9 சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 152 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை பட்டியலில், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அபிஷேக் சர்மா 135 ரன்களுடன் 2ம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், 115 ரன்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். ஒட்டு மொத்த ஐபிஎல் தொடரில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்களில், ராகுல் 3ம் இடத்தில் உள்ளார். கடந்த 2013ல், பெங்களூரு அணியின் கிறிஸ் கெயில் 175 ரன்கள், 2008ல் கொல்கத்தா அணியின் பிராண்டன் மெக்கலம் 158 ரன்கள் விளாசி, ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
