குமரியில் சீசன் நிறைவு; 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்த தேன் உற்பத்தி: தேனீ வளர்ப்போர் ஏமாற்றம்

 

குலசேகரம்: தமிழகத்தில் குமரி மாவட்டமானது தேன் உற்பத்திக்கு புகழ்பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. குமரியில் உற்பத்தி செய்யப்படும் ரப்பர் போன்று குமரி மாவட்ட தேனுக்கும் உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு. இதற்கு காரணம் பாரம்பரியம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலை, அடர்ந்த காடுகள் மற்றும் ரப்பர் காடுகள் நிறைந்த பசுமையான கால சூழ்நிலை ஆகும். இந்த மாவட்டத்தில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் பழங்குடி மக்கள் காடுகளில் உள்ள மரங்களில் மலைகளில் இயற்கையாகவே தேனீக்கள் கட்டும் கூடுகளில் இருந்து தேன் எடுக்கின்றனர். இதுதவிர பழங்குடி மக்கள் செயற்கையான தேன் பெட்டிகளை காடுகளில் வைத்து தேன் எடுக்கின்றனர்.

இந்த வகை தேன் மருத்துவ குணம் மிக்கது. இதற்கு உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் தேவைக்கு அவ்வகை தேன் கிடைப்பதில்லை என கூறுகின்றனர். இது தவிர மாவட்டத்தில் மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேன் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தொழில் முறையில் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்திக்கு செய்வதற்கு இங்குள்ள ரப்பர் தோட்டங்கள் ஆதாரமாக உள்ளது. ரப்பர் மரங்களில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இலையுதிர் காலங்களாகும். இதில் பிப்ரவரி இறுதியில் இருந்து மரங்கள் புதிய துளிர் விடும். தளிர் இலைகள் துளிர்க்க தொடங்கும்போது மரக்கிளைகளில் 3 இலைகள் சேரும் தளிர்க்காம்பு மற்றும் பூக்களில் சுரக்கும் நெக்டர் எனப்படும் மதுரத்தை தேனீக்கள் உறிஞ்சி எடுத்த பின் அதனை தேனாக மாற்றி கூடுகளில் சேமிக்கின்றன.

இதற்காக தேனீ வளர்ப்போர் ரப்பர் தோட்டங்களில் தேனீக்கள் அடங்கிய தேன் பெட்டிகள் எனப்படும் தேன் கூடுகளை வைக்கின்றனர். மார்த்தாண்டத்தை மையமாக கொண்டு குழித்துறை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, பிணந்தோடு, சேக்கல், குலசேகரம், பேச்சிப்பாறை, மலைவிளை, கொட்டூர், சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என ஏராளமானோர் தேன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சீசன் காலங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் சீசன் சரியாக அமைந்தால் ஆண்டுக்கு 5 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தியாகும்.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் தேனீ வளர்ப்போரால் அந்த மாநிலத்தில் இருந்து சுமார் 25 லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேன் சார்ந்த வணிகம் குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே தேன் சீசன் சரியாக அமைய வேண்டுமென்றால் தேனீக்கள் இயல்பான சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும். மேலும் ரப்பர் மரங்களில் இலைகள் துளிர்க்கும் காலத்தில் ஓரிரு மழை மட்டுமே பெய்ய வேண்டும். மேலும் பனிப்பொழிவு டிசம்பர் மாதத்துடன் நின்றுவிட வேண்டும். இதற்கு மாறான தேனீக்களுக்கு நோய் தாக்குதல், அதிக அளவில் மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற சூழ்நிலைகள், இலைகள் சுருண்டு விழுதல் போன்றவை ஏற்பட்டால் தேன் உற்பத்தி குறைந்துவிடும்.

இந்த நிலையில் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு மற்றும் பிப்ரவரி மாதத்தில் மலையோர பகுதிகளில் இயல்பை விட கூடுதல் மழை பெய்ததன் காரணமாக தேனீக்களால் அதிகளவில் தேனை சேகரித்து கூடுகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தேனீ வளர்ப்போர் கூறுகின்றனர். இதனால் இம்மாதம் சீசன் முழுமையாக முடிந்த பின்னரும் தேன் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விட்டது என தேனீ வளர்ப்பு விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

Related Stories: