சென்னை: தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை மற்றும் இதர ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக 14 ஆயிரத்து 508 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்து வாக்கு செலுத்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் சேர்த்து 10,663 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. குறிப்பாக, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு, மாதவரம் போன்ற போக்குவரத்து வழித்தடங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மற்றும் நாளை என இரு தினங்களுக்கும் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இன்று சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் கூடுதலாக 1,295 பஸ்களும், முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதேபோல், நாளை சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 3,184 சிறப்பு பஸ்களும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மொத்தமாக 14 ஆயிரத்து 508 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இன்று 19 ஆயிரத்து 676 பயணிகளும், நாளை 47,001 பயணிகளும் பயணத்திற்கான முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in அல்லது செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் அரசு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
