பாதுகாப்பு வளைவு டிசைனில் மாற்றம்; குற்றாலம் மெயினருவியில் கட்டுமான பணிகளில் தொய்வால் அதிருப்தி: விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

 

தென்காசி: புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் மெயினருவியில் புதிய பாதுகாப்பு வளைவு டிசைனில் மாற்றங்கள் செய்வதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பில் கார் பார்க்கிங் பகுதி விஸ்தரிப்பு, தடுப்பு சுவர்கள் கட்டுதல், தளம், உடைமாற்றும் அறைகள் அமைத்தல், உணவு கூடம் கட்டுதல், மெயினருவி பாதுகாப்பு வளைவு அகற்றப்பட்டு புதிய பிரமாண்டமான பாதுகாப்பு விளைவு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த மாதம் துவங்கியது. ரூ.11 கோடி மதிப்பில் நடைபெறும் இப்பணிகளுக்காக கடந்த மார்ச் 22ம்தேதி முதல் மெயினருவியில் 45 தினங்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வளைவு அமைக்கும் பணியை மேற்ெகாளச்ள வசதியாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட பாதுகாப்பு வளைவானது முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வளைவானது அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் முக்கிய அங்கமாக திகழ்ந்தது. அதாவது அருவியில் தண்ணீர் வரத்து வேகம் அதிகமாக இருக்கும் போது தடாகம் மற்றும் ஆற்றில் சுற்றுலா பயணிகள் இழுத்துச் சென்று விடாதவாறு தடுக்கும் வகையில் பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு வளைவானது மெயினருவி பாறையில் இருந்து நான்கு மீட்டர் இடைவெளியில் ஐந்து அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. 1994ம் ஆண்டு குற்றாலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் சமயத்தில் கூட இந்த பாதுகாப்பு வளைவு தாக்குப்பிடித்து நின்றது.

அதன் பிறகு ஏற்பட்ட பல வெள்ள பெருக்களிலும் மேற்பூச்சு லேசாக சேதம் அடைந்தாலும் பாதுகாப்பு வளைவு தாக்குப்பிடித்து கம்பீரமாக நின்றது. ஆனால் கடந்தாண்டு தொடர்ச்சியாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு வளைவு ேலசான சேதமடைந்தது. இதைதொடர்ந்து பழைய வளைவை அகற்றி விட்டு புதிய வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிதாக அமைக்கப்படும் பாதுகாப்பு வளைவானது பாறைக்கும் பாதுகாப்பு வளைவிற்குமான இடைவெளி நான்கு மீட்டரில் இருந்து 12 மீட்டர் ஆக திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோன்று பழைய பாதுகாப்பு வளைவு 5 அடி உயரம் மட்டுமே இருந்த நிலையில் புதிய பாதுகாப்பு வளைவானது மையப் பகுதியில் 8 அடி உயரத்திற்கு அமைக்கப்படுகிறது.

அதேபோன்று பாதுகாப்பு வளைவின் நீளமானது 8 மீட்டர் அளவிற்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமாக 18.5 மீட்டர் அளவிற்கு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அருவிப்பகுதியில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் நின்று குளிக்க முடியும். இதற்கிடையே 12 மீட்டர் தொலைவில் பாதுகாப்பு விளைவு அமைத்தால் தடாகத்தில் பெருமளவு மூடப்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் வெள்ள சமயங்களில் அருவி நீரானது தரையை சேதப்படுத்தும். அதாவது தடாகத்தில் உள்ள தண்ணீர் வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. புதிய டிசைனால் தடாகம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக 12 மீட்டர் இடைவெளியிலும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பணிகள் துவங்கி பாதுகாப்பு ஆர்ச் அமைப்பதற்கான அஸ்திவாரம் மற்றும் கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆர்ச் டிசைனில் மேலும் மாற்றம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பாதுகாப்பு வளைவு அமைக்கம் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை சார்பில் கூறுகையில், ‘பாதுகாப்பு வளைவு சம்பந்தமான டிசைன் சுற்றுலா துறையின் உயர் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை. ஆர்ச் மற்றும் அதனை சுற்றி அமைக்கப்படும் வடிவமைப்பானது குற்றாலம் அருவியின் எழிலை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். அதாவது சாதாரணமாக மக்கள் நடந்து வரும்போது அருவியும் அதில் மக்கள் மகிழ்ச்சியாக குளிப்பதையும் பார்க்கின்ற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வடிவமைப்பில் சுற்றுலா துறையின் சில மாறுதல்களை செய்கின்றனர். விரைவில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் பெறப்படும் அதன் பிறகு பணிகள் விரைந்து முடிக்கப்படும்’ என்றனர்.

சுற்றுலாதுறை பணிகளை துரிதபடுத்தவேண்டும்
குற்றாலம் பணிகளில் சுற்றுலா துறையின் செயல்பாடு பல்வேறு வகைகளில் திட்டமிடப்படாத செயல்பாடு ஆக உள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. குற்றாலம் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை சார்பில் 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் இந்த நிதியானது குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான விஷயங்களை அவர்கள் செய்து கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது சுற்றுலா துறை நேரடியாக இந்த பணிகளை மேற்கொள்கிறது. முதலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட டெண்டர் பணிகளை துவங்காத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது பணிகள் துவங்கினாலும் இன்னமும் ஆர்ச் வடிவமைப்பே இறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. சுற்றுலா துறையின் செயல்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலேயே குற்றாலத்தில் மழை மற்றும் சீசன் துவங்கி விடுகிறது. இன்னும் ஒன்று இரண்டு வாரங்களே உள்ள நிலையில் வழக்கம்போல் சுற்றுலாத்துறை பணிகளை துரிதபடுத்தாமல் உள்ளது. தற்போது மெயின் அருவியில் குளிக்க தடை உள்ள காரணத்தால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. சீசன் துவங்கி விட்டால் பணிகளில் மேலும் தொய்வு ஏற்படும் அல்லது பணிகளை காரணம் காட்டி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சம் குற்றாலம் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

Related Stories: