தஞ்சை: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்கள் மேல் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 75,064 வாக்குச்சாவடிகளில் 5.73 கோடி பேர் வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூம் எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலமாக 24 மணி நேரமும் ஸ்ட்ராங் ரூம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 62 வாக்கு எண்ணும் மையங்களின் மேல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம் மற்றும் பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம், அரசு கலைக்கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறைகள் முன்பு 24 மணிநேரமும் காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்பிரிவு காவல் துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு காரணம் கருதி கடந்த 24ம் தேதி காலை 6 மணி முதல் வரும் மே 5ம் தேதி மாலை 6 வரை மணி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
