வாக்கு எண்ணிக்கை மைய கேமராவில் தவறான நேரம் காட்டுவதால் சர்ச்சை: திருப்பூரில் பரபரப்பு

 

 

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தவறான நேரத்தை காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 109 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் 88.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் உள்ள 1983882 மொத்த வாக்காளர்களில் 227773 பேர் வாக்குகளை செலுத்தவில்லை,மாவட்டத்தில் 2822ஓட்டு சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஓட்டு பதிவு முடிந்த பின்னர் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான திருப்பூர் எல்ஆர்ஜி அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் அந்தந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் உள்ளன.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காலை 7 மணிக்கு பதிலாக காலை 5 மணி என தவறுதலாக நேரத்தை காட்டியது. இது குறித்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுமதியுடன் இருக்கக்கூடிய அரசியல் கட்சி ஏஜென்ட்கள் அதிகாரிகளிடம் கேட்டதற்கு சரியான விளக்கத்தை அவர்கள் தரவில்லை. இந்த குளறுபடிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இதேபோன்று தவறுதலான நேரத்தையே காட்டுவதால் இதில் ஏதோ குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டை அரசியல் கட்சியினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 200க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அதிரடி படையினர், துணை ராணுவ படையினர், ஆயுத படையினர், மாநகர காவல் துறையினர் என 4 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது. மூன்றாவது கண் என சொல்லப்படும் கண்காணிப்பு கேமராவில் சரியான நேரம் காட்டப்படாததால் அரசியல் கட்சியினர்கள் இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: