பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து…10 கி.மீ வரை தெரிந்த அடர்த்தியான கரும்புகை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ விபத்து காரணமாக வானம் முழுவதும் அடர்த்தியான கரும்புகை பரவியதாலும், அது 10 கிலோமீட்டர் தொலைவு வரை தெரிந்ததாலும் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.

ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி கிடந்ததால் தீ மளமளவென பரவி அந்த பகுதியே கரும் புகையால் சூழப்பட்டது. கடா அக்ரஹாரா – ராம்புரா சாலையில் அமைந்துள்ள பிரெஸ்டீஜ் அகஸ்டா கோல்ஃப் வில்லேஜுக்குப் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயன்படுத்தப்படாத மற்றும் மறுசுழற்சி செய்ய வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் இருந்தால் தீ விபத்து மோசமானதாக இருந்ததாகவும், இது கடும் தீப்பிழம்புகளுக்கும், அடர்த்தியான புகைமூட்டம் ஏற்படவும் வழிவகுத்ததாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தொட்டகுப்பி கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட ராம்புரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கிடங்கில் இருந்ததால் தான் எதிர்பாராவிதமாக தீ வேகமாகப் பரவியதாகவும், அடர்த்தியான புகை மண்டலம் அருகிலுள்ள பகுதிகளைச் சூழ்ந்ததாகவும் தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். வெகுதொலைவில் இருந்தே கருப்புப் புகை வானத்தில் உயரமாக எழுவதை எங்களால் பார்க்க முடிந்தது. அருகிலுள்ள வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்துடன் இருந்தனர் என ஒருவர் கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் பல தீயணைப்பு மற்றும் அவசர சேவை வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயின் தீவிரம் மற்றும் அந்த இடத்தில் சேமிக்கப்பட்டிருந்த பொருட்களின் தன்மை காரணமாக சவாலான சூழ்நிலைகளை எதிர்த்து பல மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்பு வீரர்கள். அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: