உ.பி-யில் குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை..! 2 மணிநேர போராட்டம் என்ன ஆனது.?

முசாபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் குரங்கானது குழந்தையை விட்டு நகராமல் அதன் அருகிலேயே அமர்ந்திருந்ததால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே பீதி ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள குடும்பத்தினர் தாங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், ​​அந்த 3 மாத குழந்தை ஒரு அறைக்குள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது.

மதியம் சுமார் 2 மணியளவில், ஒரு பெண் குரங்கு கூரையின் வழியாக அமைதியாக வீட்டிற்குள் நுழைந்து, குழந்தைக்கு அருகில் போய் அமர்ந்து கொண்டது. நல்வாய்ப்பாக அந்த குரங்கு குழந்தைக்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் அதனை தொட்டு விளையாடத் தொடங்கி, குழந்தையிடம் பாசமாக நடந்து கொண்டது.

திடீரென குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் அறைக்குள் சென்று பார்த்த போது தான், ​​குழந்தையின் அருகில் குரங்கு அமர்ந்திருப்பதே தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த தாய் கூச்சல் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அறையை நோக்கி விரைந்து வந்துள்ளனர். பின்னர் குழந்தை அருகே குரங்கு அமர்ந்து இருக்கும் காட்சியை கண்டு பீதியடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து குரங்கிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற குச்சிகளையும் உணவையும் பயன்படுத்தி குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால் குரங்கோ ஆக்ரோஷமாகி, குழந்தையை விட்டு நகர மறுத்ததோடு, தன்னை விரட்ட முயன்றவர்களை தாக்க முயன்றது. இதனால் அவர்கள் குரங்கை அடித்து விரட்டும் முயற்சியை கைவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.

இறுதியாக விலங்கு மீட்பாளரான சன்னி சோப்ரா என்பவரை தொடர்பு கொண்டனர். அவர் அவரது குழுவினரோடு சம்பவ இடத்திற்கு வந்தார். பின் உணவை காட்டி குரங்கை ஈர்க்கும் முயற்சிகள் நடைபெற்றது, ஆனாலும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. பின் குரங்கின் கவனத்தைத் திசை திருப்ப மொபைல்களில் வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை குரங்கிடம் காட்டினர். அது மொபைல் வீடியோக்களை ஆர்வமாக பார்த்த போது, சமயம் பார்த்து குரங்கின் அருகில் இருந்த 3 மாத குழந்தையை கவனமாக இழுத்து தூக்கினர். இதனால் குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: