குமார்கஞ்ச்: மேற்குவங்க மாநிலத்தில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அந்த வகையில் குமார்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்கார் என்பவரை பொதுமக்கள் விரட்டி விரட்டி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தாக்குதலை வாக்காளர்கள் என்ற போர்வையில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொண்டர்களே நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்த வாக்குசாவடிக்கு மிக அருகே கலவரம் ஏற்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து சுவேந்து சர்க்கார், வாக்குச்சாவடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அடங்கிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கலவரம் நடப்பதாக தகவல் வந்த வாக்குசாவடியை நோக்கி செல்ல முயன்ற போது தங்களின் வேட்பாளர் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டார், பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என மாநில பாஜக கூறி இருக்கிறது. இதனிடையே இந்தச் சம்பவத்தை தீவிரமாக கருத்தில் கொண்ட தேர்தல் ஆணையம், தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளில் காணப்படும் நபர்களைக் கைது செய்யவும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே குமார்கஞ்ச் தொகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், தங்களது வாக்குச்சாவடி முகவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் கட்சி ஆட்சியை இழக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டுள்ளது, அதனால் தான் அக்கட்சியின் தொண்டர்கள் இவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்றும் பாஜக கூறி இருக்கிறது.ஆனால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
