சென்னை: தேர்தல் சூழலில் உடல்நலக் கவனம் அவசியம் என்றும் கோடை வெயிலில் பக்கவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் 2026ம் ஆண்டின் கோடைக்காலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி, தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பதிவாகி வருகிறது.
இந்த அதீத வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு, கடுமையான உடல்நலச் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. வெப்பம் அதிகரிக்கும்போது நமது உடல் தன்னை தானே தற்காத்துக் கொள்ள வியர்வை மூலம் வெப்பத்தை வெளியேற்றும். ஆனால், ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போதோ அல்லது நீண்ட நேரம் வெயிலில் இருக்கும்போதோ உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க முடியாமல் போகிறது. இதனால் தலைசுற்றல், வாந்தி, தாகம் அதிகரிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். மேலும், வெப்ப பக்கவாதம் (heat stroke) ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு பிரச்சினையும் வெயிலின் தாக்கத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. உடலில் உள்ள நீர் மற்றும் உப்புச் சத்து குறைவதால் சோர்வு, தசைப் பிடிப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, வெளியில் வேலை செய்பவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் இந்தப் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகிறார்கள். இதற்கு மேலாக, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் அதிகரிக்கின்றன. நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் தோலில் எரிச்சல், கருமை மற்றும் சூரியக் காய்ச்சல் (sunburn) போன்றவை ஏற்படுகின்றன. கண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு நிழற்குடை வசதி, குடிநீர் வசதி மற்றும் முதலுதவி மருத்துவக் குழுக்களை தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்திருந்தாலும், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கையில் தண்ணீர் பாட்டில் உடன் வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனை மருத்துவர் வெற்றிசெல்வன் கூறியதாவது: ‘மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸ் முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும்’. இந்த உடல் வெப்பநிலை மாறும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இறப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உடல் அதிகம் வெப்பமாகும் போது சில அறிகுறிகள் தோன்றும். குறைந்த அளவு பாதிக்கப்பட்டால் வெப்பப் பிடிப்புகள் (heat cramps/exhaustion) என்றும், அதிக அளவில் ஏற்பட்டால் வெப்பப் பக்கவாதம் (heat stroke) என்றும் அழைக்கப்படும்.
உழைப்பு வெப்பப் பக்கவாதம் (exertional heat stroke) வெப்ப அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியில் வேலை செய்யும் நபர்கள், உடல் பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும். கிளாசிக் வெப்பப் பக்கவாதம் (classic/non-exertional heat stroke) முதியவர்கள், குழந்தைகள் அல்லது நாள்பட்ட நோயுள்ளவர்களுக்கு ஏற்படும்.உடல் வெப்ப நிலை அதிகரிப்பு, உடல் சோர்வு, உடல் வலி இருந்தால் இவை வெப்பப் பிடிப்புகளாகும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்து, நினைவு இல்லாத நிலை வெப்பப் பக்கவாதம் என்று சொல்லுவோம். ஒருவருக்கு வெப்பத் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால், உடல் வெப்பநிலையை உடனடியாக சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக அவர்கள் ஆடையை கழற்ற வேண்டும், ஐஸ் இருந்தால் தலையில் வைக்க வேண்டும், தண்ணீரை உடல் முழுவதும் ஊற்ற வேண்டும் (cold water sponging), உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.
இதில் இருந்து தற்காத்துக்கொள்ள வெப்பத்தில் வேலை செய்வதையோ அல்லது வெளியில் செல்வதையோ தவிர்க்க வேண்டும். ஆடையை இறுக்கமாக அணியக் கூடாது. தளர்வான, ஒளி நிற ஆடைகளை அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
