சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் நில விவகாரத்தில் சுமார் 6 ஆண்டுகளாக நீடித்து வந்த ‘தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்’ என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அப்பாவி குடிமக்கள் பல தசாப்தங்களாக வைத்திருக்கும் நில உரிமைகளை அரசு தன்னிச்சையாகப் பறிக்க முடியாது, என்று கூறியுள்ள நீதிபதிகள், நில உரிமையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மறுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
தாழம்பூர் கிராமத்தில் தியாகிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் சி.இ.சத்யநாராயணா ரெட்டி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கடந்த 2018-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணையைத் தொடங்கியது.
இதற்கிடையே, கடந்த 2019ல் இந்த நிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவு பிறப்பித்தது. இதனால், காசா கிராண்ட் கட்டிய 800-க்கும் மேற்பட்ட வீடுகள், ராணுவ நல வாரியத்தின் 852 குடியிருப்புகள் மற்றும் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வீடுகளை வாங்கிய பொதுமக்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகளின்றி 6 ஆண்டுகளாகத் தவித்து வந்தனர்.
இதனையடுத்து, பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்து இருந்த தற்போதைய நிலையே தொடர வேண்டும், என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே இருந்து வந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தாமதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமர்வு, அரசு தனது தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக்கொண்டு, 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நிலத்தைத் தனது நிலம் என்று உரிமை கோர முடியாது.
காலச்சக்கரத்தைப் பின்னோக்கிச் சுற்றி அப்பாவி குடிமக்களின் உரிமைகளைப் பறிக்க அரசை அனுமதிக்க முடியாது, என நீதிபதிகள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை அனுபவித்து வரும் நபர், அந்த நிலத்தின் மீது சட்டப்பூர்வமான உரிமையையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பார். அதனை அரசு தன்னிச்சையாகக் கலைக்க முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நில உரிமை தொடர்பாக ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அதனை உரிய காலத்திற்குள் அரசு தீர்க்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நில உரிமை கோருவது ‘இயற்கை நீதிக்கு’ எதிரானது. ஒரு அரசு பல தசாப்தங்களுக்கு முன் நடந்த நில பரிமாற்றங்களை இப்போது வந்து ரத்து செய்ய முயலக்கூடாது. அப்பாவி குடிமக்களின் பணத்தையும், உரிமையையும் அரசு மதிக்க வேண்டும், என நீதிபதிகள் கூறினர். நில விவகாரம் நிலுவையில் உள்ளது என்பதற்காக, அங்கு வசிக்கும் மக்களுக்குத் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை அரசு மறுக்கக் கூடாது, எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 2019ம் ஆண்டு முதல் அமலில் இருந்த ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு 4 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அதன்பிறகு 2 மாதங்களில் அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பு உரிமைகளை அரசு கவனத்தில் கொண்டு சட்டப்படியான முடிவை எடுக்க வேண்டும், என உத்தரவு பிறப்பித்தனர்.
