*படகு சவாரி பாதிப்பு
கூடலூர் : தேக்கடி ஏரியில் நீர்மட்டம் குறைந்ததையடுத்து படகு சவாரி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் குமுளியை அடுத்துள்ள தேக்கடி நீர்த்தேக்கம் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்றனர்.
படகு சவாரி செய்யும்போது சுற்றியுள்ள வனப்பகுதியில் திரியும் யானை, மான், புலி காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளையும், பறவை இனங்களையும் கண்டுகளிக்கலாம். இது தவிர யானை சவாரி, நேச்சர் வாக், மூங்கில் படகு சவாரி, நேச்சர் கேம்ப் உள்ளிட்ட இயற்கை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.
தேக்கடி ஏரியின் நீர்மட்டம் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சார்ந்தே இருக்கும். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 4 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 110 அடியாக குறைந்துள்ளது. இதனால், தேக்கடி அணையின் நீர்மட்டமும் குறைந்துள்ளது. தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 7 படகுகள் தினசரி ஐந்து முறை இயக்கப்படுகின்றன.
தற்போது ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் படகுகளின் அடிப்பாகம் சேற்றில் சிக்கியோ அல்லது ஏரியில் உள்ள மரங்களில் தட்டியோ விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, ஏரியில் பயணிக்கும் படகுகளின் எடையை குறைக்கும் வண்ணம், பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தேக்கடி ஏரியில் அம்மாநில வனத்துறை சார்பில் வனஜ்யோத்ஸ்னா, வனதர்ஷன், வனலட்சுமி, பெரியாறு உள்ளிட்ட பெரிய படகுகளும், கேரளா சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஜலயாத்திரா, ஜலஜ்யோதி ஆகிய இருதளங்கள் கொண்ட படகுகளும் இயக்கப்படுகின்றன.
120 பேர் பயணிக்கும் இருதள படகுகளில் தற்போது 50 பேரும், 60 பேர் பயணிக்கும் படகுகளில் தற்போது 45 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 20 பயணிகள் ஏற்றிச்செல்லும் சிறிய படகுகளிலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
தினசரி 1,500 பேருக்கும் மேல் படகு சவாரி செய்து வந்த நிலையில். தற்போது 700 பேர் மட்டுமே படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, சுற்றுலாத்துறை மட்டுமன்றி அதை சார்ந்த தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வணிகம் மற்றும் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்னும் அணையின் நீர்மட்டமும், ஏரியின் நீர்மட்டமும் 108 அடிக்கு கீழ் குறையும் பட்சத்தில், பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரியில் படகு சவாரி முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
