சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே பல இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை வானிலை மையம் முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
அது என்னவென்றால் தமிழகத்தில் தேர்தல் நாளான நாளை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான உள் மாவட்டங்களில் 4 நாள்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.26-04-2026 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என குறிப்பிடுப்பட்டுள்ளது.
பலரும் தங்களின் ஜனநாயக கடமையினை செய்து முடிக்க ஆவலுடன் இருக்கும் நிலையில், நாளை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அதே நேரம் நாளை சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் கோடை வெயில் தாக்கத்திலிருந்து வாக்காளர்களை பாதுகாக்க தேர்தல் ஆணையம் சில ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் பந்தல்கள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்காளர்களின் தாகத்தைத் தணிக்க போதிய அளவு சுத்தமான குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் தாக்கத்தால் வாக்காளர்களுக்கு மயக்கம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க, உப்புச் சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் அவசர கால முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே உடல்நலம் சரியில்லாதோர் அல்லது வயது முதிர்ந்த வாக்காளர்கள் காலை வெயில் அதிகரிப்பதற்குள் அதாவது 7 மணி முதல் 10 மணிக்குள் வாக்கினை செலுத்துமாறு பார்த்து கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கையில் தண்ணீர் பாட்டில்கள் வைத்திருப்பது கூடுதல் நன்மை என்று அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
