*போலீசாருக்கு எஸ்பி அறிவுறுத்தல்
ராணிப்பேட்டை : 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு சுமூகமாக நடக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 1,247 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 65 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மையம் குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், கணினி குலுக்கள் முறையில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரிசையின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி பிரித்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம்(தனி) சட்டமன்ற தொகுதியில் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சோளிங்கர் தாலுகா அலுவலகத்திலும், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் விவிபாட் இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் மற்றும் புகைப்படம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து நாளை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் பணிக்கு செல்லும் போலீசாருக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் எஸ்.பி சிபின், வாக்குப்பதிவு எவ்வித பிரச்னைகள் இல்லாமல் சுமூகமாக நடக்க உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சாவடி மையத்தில் கட்சி பிரமுகர்கள் 100 மீட்டர் தொலைவில் தான் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.
