*கூடுதல் தொட்டிகள் அமைக்க கோரிக்கை
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கோடைகாலத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
அதன் பிறகு படிப்படியாக நாளுக்கு நாள் சதமடிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
அதே வேளையில் கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளிலும் பசுமை மாறி வறட்சி நிலவ ஆரம்பித்து விட்டது. மேலும், ஓடைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலை பகுதிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகள் பறந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மான்கள், காட்டெருமை, காட்டுப்பன்றி, மயில்கள் என ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.
கோடை காலம் வந்து விட்டாலே வனப்பகுகளில் உயர் வாழும் வனவிலங்குகள் உணவு பற்றாக்குறை மற்றும் தண்ணீர் இன்றி வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டது.
இதனை தடுக்கும் வகையில் கோடை காலம் தொடங்கிய முதலே வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வந்தனர். ஆனால், வனப்பகுதிகளில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தண்ணீர் தொட்டிகள் உள்ளது.
அதேபோல், வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தொட்டிகளில் நிரப்பப்படும் தண்ணீர் வனவிலங்குகளுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, வனவிலங்குகளும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுகிறது. இவ்வாறு வரும் வனவிலங்குகளை நாய்கள் கடிப்பதும், இறைச்சிக்காக சிலர் வேட்டையாடுவதுமாக இருந்து வருகிறது.
இதனால், வனத்தை விட்டு வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு நுழையாதபடி ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் உத்தரவின் பேரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் இல்லாத தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இருந்த போதிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்து காணப்படும் வனப்பகுதியில் இன்னும் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். அப்படி தொட்டிகள் அமைத்து அதனை பராமரித்து வந்தாலே உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு தஞ்சமடையாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
