தமிழ்நாட்டை வஞ்சிக்கவும் – வளர்ச்சியை தடுக்கவும் நினைப்பவர்களுக்கு‘நான் என்றைக்குமே டேஞ்சர்’ சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிதான் நமது முதன்மையான குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், வளர்ச்சியை தடுக்கவும் நினைப்பவர்களுக்கு நான் என்றைக்குமே டேஞ்சர் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். தேர்தல் பிரசாரம் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நான் மக்களை சந்தித்தாலும், இந்த வீடியோ மூலமாக சில விஷயங்களை உங்களிடம் மனது விட்டு பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாட்களில் தேர்தல். இந்த சமயத்தில் எனக்கு ஒரு விஷயம் மைண்ட்-இல் வருகிறது. 2021ல் இதேபோன்று ஒரு சட்டமன்றத் தேர்தல். அந்தச் சமயத்தில் சில பேர் \\”Stalin is more dangerous than Karunanidhi\\” என்று சொன்னார்கள். கலைஞரோடு என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதைவிட, தலைவர் என்று கூப்பிட்டதுதான் அதிகம்.

அப்படிப்பட்ட தலைவரைவிட நான் more dangerous என்று அவர்கள் சொல்லும்போது, எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான். இதில் கலைஞரைவிட ஒரு படி மேலே இருக்கிறேன் என்றால், அது எனக்கு பெருமைதானே.

ஏனென்றால் இதெல்லாம் நம்முடைய தமிழர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் என்னை முதல்வராக்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. \\”ஸ்டாலின் சார், முதல்வர் ஆனது எல்லாம் ஓகே… இந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?\\” என்று யாராவது கேட்டால், நம்மால் மணிக்கணக்காக, ஏன் நாட்கணக்காகக்கூட பேச முடியும்.

முக்கியமாக எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து, தமிழ் மக்களுக்காக சண்டை செய்திருக்கிறேன் என்பதை இன்னும் பெருமையாக என்னால் சொல்லி கொள்ள முடியும். சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சி என்பதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.
கல்வி ஒன்றுதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத ஒரே சொத்து.

அதனால்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் என்று கல்விக்காக மட்டும் இந்த ஆட்சியில் அவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் எந்த டேட்டாவை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள். தொழில்துறை, விவசாயம், கல்வி என்று அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு டாப்-ல் இருக்கும். அதற்கு அடையாளமாக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக, எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்கத்தை தொட்டு இருக்கிறது. இன்னும் உயரம் தொடுவோம் என்ற உறுதியும் எனக்கு இருக்கிறது.

இப்படி அனைத்து வகையிலும் நாம் முன்னேறி இருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கிறது என்பது எனக்கும் தெரியும். ஏனென்றால் நம்முடைய ஆட்சியை பற்றிய விமர்சனம், feedback அனைத்தையும் காது கொடுத்து கேட்பவன் நான். குறைகளாக சொல்லப்படும் ஒரு சில விஷயங்களில்கூட நாம் மற்ற மாநிலங்களை கம்பேர் செய்யும்போது மிகவும் சிறப்பாகத்தான் இருக்கிறோம்.

இருந்தாலும், அந்த குறைகளையும் சரி செய்ய அனைத்து விதமான வழிமுறைகளையும் நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டோம். அதன் விளைவுகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்ப்போம். தேர்தல் நடக்கும் இந்த சமயத்திலேயே இவ்வளவு ஆணவத்தோடு நம்மை வஞ்சிக்க நினைக்கிறார்கள் என்றால், இதே தேர்தலில் அவர்களின் அடிவருடி எடப்பாடி பழனிசாமி வென்று ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னென்ன கொடுமையெல்லாம் இங்கே அரங்கேறும் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை.

இன்றைக்கு அ.தி.மு.க. என்ற அடிமை கட்சிக்கு ஓனர் பா.ஜ. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சில் புகுந்து கலவரம் செய்வது, புல்டோசர் வைத்து இஸ்லாமிய மக்களுடைய வீடுகளை இடிப்பது என்று எவ்வளவோ கொடுமைகள் செய்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து கிடக்கிறார். ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் என்றைக்குமே நாங்கள் களத்தில் நிற்போம்; அவர்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம்.

நம் உரிமையை, நம் உழைப்பை, நம் மக்களுடைய கலாச்சாரத்தை, நம் மொழியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களோ, அவர்களுடைய அடிமைகளோ நமக்கு வேண்டாம். இந்த வளர்ச்சியும் – வளமான எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளும் தொடர வேண்டும். நான் உங்கள் அப்பாவாக, அண்ணனாக, ஒரு தம்பியாக, ஒரு தோழனாக உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும், எங்களது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: