தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வராது என்பதை உடைத்து திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வராது என்பதை உடைத்து, திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடக்கிறது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 3வது நாளாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதாவது நேற்று காலையில் சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நடந்து சென்று மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கேயும் அவர் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்தனர். மேலும் இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்டோவில் பயணித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆட்டோவில் அமர்ந்து முதல்வர் வாக்கு சேகரித்தது மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், ‘‘சென்னை என்றுமே திமுகவின் கோட்டை. சோழிங்கநல்லூர் – வேளச்சேரி – சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்” என்றும் பதிவிட்டார். தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, மேடவாக்கம் டேங்க் ரோடு, சோமசுந்தரம் 6வது தெரு, நெட்ட முத்தியல்கான் தெரு (என்.எம்.கே.தெரு), பட்டாச்சாரி தெரு, பரசுராம ஈஸ்வரன் கோயில் தெரு, கொன்னூர் நெடுஞ்சாலை, ஐ.சி.எப். சிக்னல் அருகிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்கள் வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஒரு மாத காலமாக நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள வாக்காளர்களை சந்தித்த போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி உருவாகப் போகிறது. அதற்கு நாங்கள் ஆதரவு தரப் போகிறோம்” என்ற உறுதியை தந்திருக்கிறார்கள். அந்த உறுதியை பெற்றுக் கொண்டு, நான் நேற்றைக்கு முன்தினம் சென்னை திரும்பினேன்.

நேற்று முன்தினமும், நேற்றும் சென்னையில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்குச் சென்று, இதே போன்ற பிரசார பயணத்தை நான் தொடர்ந்து நடத்தினேன். அதைத் தொடர்ந்து, இன்றைய (நேற்றைய) நிறைவு நாள் பிரசாரத்தை மாலை ஆறு மணிக்குள் முடிக்க வேண்டும் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

கொளத்தூர் தொகுதியில்தான் நான் வேட்பாளராக நிற்கிறேன். அதுவும் உங்களுக்குத் தெரியும். எதற்காக சொல்கிறேன் என்றால், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்றவன் தான். இன்னும் தொகுதியைகூட சென்று பார்க்கவில்லை. இங்கு முடித்துவிட்டு, இறுதியாக அங்குதான் செல்கிறேன்.

அங்கு சரியாக ஒரு மணி நேரம் தான். என்ன நம்பிக்கை என்றால், “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தான் பிள்ளை தானே வளரும்” என்று சொல்வார்கள் அல்லவா? அந்த உணர்வோடுதான் நான் இருக்கிறேன். தமிழ்நாட்டில் என்னுடைய தலைமையில் திராவிட மாடல் ஆட்சி உருவானதற்குப் பிறகு, தேர்தல் நேரத்தில் சொன்ன உறுதிமொழிகள் எல்லாம் எப்படி காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேலான வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். மீதம் இருக்கும் உறுதிமொழிகள், ஒன்றிய அரசின் தடையால்-இடையூறுகளால்-நிதி தராத காரணத்தினால் – முறையான அனுமதி வழங்காத காரணத்தினால், அந்தப் பணிகள் தடைப்பட்டிருக்கின்றன.

இப்போது நம்முடைய தேர்தல் அறிக்கையில், நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ‘இல்லத்தரசி’ திட்டத்தின்கீழ் 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வழங்கப் போகிறோம். பெண்கள் தங்களுக்கு விருப்பமான பொருளை வாங்கிக் கொள்ளலாம். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக இந்த ஆட்சி என்னென்ன செய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். உங்கள் முன்னேற்றம்தான், நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில்தான், அந்தப் பணிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது என்ன சொன்னார்கள் என்றால், “ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அதனால் முதலமைச்சராக முடியாது” என்றார்கள். அந்தக் கட்டத்தை உடைத்து, முதலமைச்சராகிவிட்டேன். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், “தொடர்ந்து தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வந்தது இல்லையாம்”. இந்த முறை, அதையும் உடைத்து இரண்டாவது முறையாக, உங்களுடைய அன்போடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வரத்தான் போகிறான்.

நம்முடைய கார்த்திக் மோகன், ஒரு நல்ல இளைஞர். துடிப்பானவர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அந்த சிரித்த முகத்தோடு, உங்களுடைய குறைகளை எல்லாம் கேட்டு, உங்களையும் சிரிக்க வைப்பார். உங்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சியை வர வைப்பார். என்ன பிரச்னை என்றாலும், துடிப்போடு உங்களுக்காகப் பணியாற்றக் கூடிய ஒரு சிறந்த இளைஞரைத்தான் தேர்ந்தெடுத்து, இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: