மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத வகையில் 1,000 அதிகாரிகள் இடமாற்றம்; மாநில உரிமைகளை தட்டிப்பறிக்கும் தேர்தல் ஆணையம்? ஒன்றிய அரசு நடத்தும் ஜனநாயகப் படுகொலை என விமர்சனம்

கொல்கத்தா: மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ள நிலையில், கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, வெறும் 15 அதிகாரிகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் அந்த எண்ணிக்கையை விட சுமார் 21 மடங்கு அதிக அளவில் மிகப்பெரிய இடமாற்றங்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 15ம் தேதி தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டதில் இருந்து, மாநில அரசின் நிர்வாகத்தை முடக்கும் வகையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், போலீசார் எஸ்பிக்கள் என சுமார் 1,000 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மாநில சுயாட்சிக்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அதிரடி இடமாற்றங்களை எதிர்த்து வக்கீல் அர்கா குமார் நாக் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 31ம் தேதி, இவ்விசயத்தில் தலையிட மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர் காந்த் மற்றும் நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மாநிலத்தின் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரிகளை, அந்த மாநில அரசின் ஒப்புதல் இன்றி ஒன்றிய அரசு இடமாற்றம் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று வக்கீல் கல்யாண் பானர்ஜி வாதிட்டார்.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்ற விதிகளின்படி மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தித் தேர்தல் ஆணையத்தின் மூலம் மாநில அரசுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிக்கிறது. இந்திய ஆட்சிப்பணி விதிமுறைகள் 1954ன்படி, ஒரு அதிகாரியை மாநிலத்தின் ஒப்புதல் இன்றி இடமாற்றம் செய்ய முடியாது.

ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்பைச் சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு அதிகாரியை ஒருதலைப்பட்சமாக இடமாற்றம் செய்யும்போது, அவர் ஏன் மாற்றப்படுகிறார் என்பதற்கான தகுந்த காரணத்தையோ அல்லது விளக்கத்தையோ அளிக்காதது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 23 மற்றும் 29ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தற்போது இதில் தலையிட முடியாது எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. இருப்பினும், மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை மாற்ற ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா என்ற முக்கிய சட்டக் கேள்வியை நீதிபதிகள் திறந்தே வைத்துள்ளனர்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், ‘உயர் அதிகாரிகள் தங்கள் சுதந்திரத்தை இழந்து அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது’ என்றார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. ஒன்றிய அரசின் மேலாதிக்கத்தால் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் அசைக்கப்படுவதாகவும், இது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

* அமித்ஷா தலைமையில் பயங்கர சதி?
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான டெரிக் ஓ பிரையன் மற்றும் மாநில அமைச்சர் சசி பஞ்சா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது ஒரு முழுநேர பாஜக தொண்டர் போலச் செயல்படுகிறார். அவர் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ போன்ற ஒன்றிய ஏஜென்சிகளின் தலைவர்களுடன் ரகசியக் கூட்டம் நடத்தியுள்ளார். அடுத்த 100 முதல் 150 மணி நேரத்திற்குள், தெற்கு வங்க மாவட்டங்களில் ஏதேனும் ஒரு மோசமான சதித்திட்டத்தைச் செயல்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இடங்களில் பாஜக தோல்வி பயத்தில் இருப்பதால் இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறது’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஒரு பெண் முதல்வரை வீழ்த்த பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் 18 ஒன்றிய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளனர்’ என்று கடுமையாகச் சாடினார்.

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, தற்போது மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்ரீ போன்ற நலத்திட்டங்களை முடக்கப் பார்ப்பதாக அமைச்சர் சசி பஞ்சா குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், 19 அரசியல் கட்சிகள் மற்றும் 300 எம்.பி.,க்கள் இணைந்து தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகக் கொண்டு வந்த கண்டன தீர்மானத்தைப் போல, விரைவில் கூடுதல் ஆதாரங்களுடன் புதிய தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் எச்சரித்தனர். நேர்மையான தேர்தல் என்ற பெயரில் அடுத்த 150 மணி நேரத்தில் அசம்பாவிதங்களை நடத்த ஒன்றிய அரசு சதி திட்டம் தீட்டியிருப்பதாக அவர்கள் பகிரங்கமாகப் புகார் கூறினர்.

* மாநில அரசின் நிர்வாகத்தை முடக்கும் வகையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர். பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், போலீசார் எஸ்பிக்கள் என சுமார் 1,000 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மாநில சுயாட்சிக்கு விடப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories: