நீதிமன்றங்களை அணுகி எப்ஐஆர் நகலை 3ம் தரப்பினர் பார்க்கலாம்: ஐகோர்ட் கிளை கருத்து

 

மதுரை: மூன்றாம் தரப்பினர் நீதிமன்றத்தை அணுகி எப்ஐஆர் நகலை பார்வையிடலாம் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிதம்பரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெண்கள் மீதான வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து எப்ஐஆர்களையும் பொதுமக்கள் ஆன்லைனில் பார்க்கும் வசதி இருந்தது. ஆனால் தற்போது சிசிடிஎன்எஸ் 2.0 திட்டத்தின் கீழ் புகார் அளித்த நபர் மற்றும் விசாரணை அதிகாரி மட்டுமே எப்ஐஆரை பதிவிறக்கம் செய்ய முடியும். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எப்ஐஆர் விபரங்களை அறிய முடிவதில்லை.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தன்மை குறித்து அறிய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் முன்ஜாமீன் போன்ற அவசர சட்ட நடவடிக்கைகளை எடுக்க தாமதம் ஏற்படுகிறது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளில் எப்ஐஆரை மீண்டும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆன்லைனில் பார்க்கும் வசதியை கொண்டு வருமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதிஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர், ‘‘எப்ஐஆர் நகலை புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர் பார்வையிட வசதி உள்ளது. எப்ஐஆர் நகலை மூன்றாம் தரப்பினர் பார்வையிட வேண்டும் என்றால் நீதிமன்றங்களை அணுகி சன்றொப்பமிட்ட நகலை பெற்றுக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: