* அரசு சார்பில் ரூ.5 லட்சம் லட்சம் நிவாரணம்
* உரிமையாளர் மீது குண்டாஸ் பாய்கிறது?
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரே கிராமத்தை சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் ஊராட்சி கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சேர்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், ஆதிபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்கல்லை சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர் கோவிந்தநல்லூரை சேர்ந்த ஈஸ்வரி, அவரது கணவர் முத்துமாணிக்கம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தில் சேர்வைக்காரன்பட்டியில் மட்டும் 18 பெண்கள், ஒரு ஆண் என 19 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியது. உயிரிழந்தவர்களின் விபரம்: பாண்டியம்மாள் (55), நாச்சியம்மாள் (56), ஜானகி (56), இந்திராணி (46), காளியம்மாள் (45), பூங்கொடி (65), பாக்கியலட்சுமி (39), அழகம்மாள் (44), நாகம்மாள் (48), பொன்னழகு (34), அன்னலட்சுமி (54), சின்ன பாப்பா (35), மாரியம்மாள் (54), பிச்சையம்மாள் (45), பேச்சியம்மாள் (51), மெய்யக்காள் (55), மருதன் (50), சுப்புலட்சுமி (43), திருத்தங்கல் வேலுச்சாமி (56), பஞ்சவர்ணம் (56), வீரலட்சுமி (42) . மூன்று பெண்கள், ஒரு ஆண் உட்பட நான்கு பேரின் சடலங்கள் இன்னும் அடையாளம் காண முடியவில்லை. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப்பகுதியினர் நிவாரணம் கோரி நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணம், பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் தலா ரூ.2 லட்சம் ரொக்க பணம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை என ரூ.8.50 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விபத்தில் இறந்த வேலுச்சாமி, பூங்கொடி ஆகியோரது குடும்பத்தினரிடம் கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். மற்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணி நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
* வெடி விபத்திற்கு காரணம் என்ன?
போலீசார் கூறுகையில், ‘‘டிஆர்ஓ லைசென்ஸ் பெற்ற இந்த ஆலை முத்துமாணிக்கம் மனைவி ஈஸ்வரி பெயரில் உள்ளது. இந்த பட்டாசு ஆலை சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.50 லட்சத்திற்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாளன்று கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் விதிமுறையை மீறி 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெடிபொருட்கள் கலவைகளை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துச் சென்று பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதிகப்படியான வெடிபொருள்கள் கலவைகளை மருந்து கலக்கும் அறைக்கு எடுத்துச் சென்றுள்ளதால், விபத்து ஏற்பட்டு 25 பேர் வரை உயிரிழந்துள்ளனர்’’ என்றனர்.
