நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சாயர்புரத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மதச்சார்ப்பற்ற முற்போக்க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இந்த தேர்தலில் அவர்கள் எப்படியாவது தமிழ்நாட்டில் ஊடுறுவ வேண்டும் என திட்டமிடுகின்றனர். ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கமும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அணிவகுக்கிறது. நாங்கள் தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை போற்றி பாதுகாக்க முயற்சி எடுத்து வருகிறோம். அதிமுகவும் அவர்களது முகமூடி அணிந்துள்ள பாஜவும் தமிழகத்தின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கின்றனர். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து மகத்தான தோல்வியை மோடிக்கு பரிசு அளித்தோம்.
அரசியல் சாசனத்தை தாக்குவதற்கான எந்த முயற்சியை முன்னெடுத்தாலும், மீண்டும் மீண்டும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளால் அந்த திட்டம் முறியடிக்கப்படும். மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும். ஏற்கனவே 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூன்றில் ஒரு பங்கு இடத்தை மகளிருக்கு நாடாளுமன்றத்தில் வழங்கிட தெளிவாக எடுத்துரைக்கிறது. அந்த சட்டத்தின்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய தேவை கிடையாது. இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அந்த மசோதா நிறைவேற்றும்போது பாஜ, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா இன்னும் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தது. நாங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். பாஜ மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கான மசோதாவை நிறைவேற்ற விரும்பினால் நாங்கள் அந்த மசோதாவை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற உத்திரவாதம் அளிக்கிறேன். ஆனால் அதை முன்வைத்து மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வரக்கூடாது.
தமிழகத்தில் சிறப்பான சமூக நீதி செயல்பாடு உள்ளது. பாஜ இந்த புனித மண்ணில் வெறுப்பையும் கோபத்தையும் விதைத்து வருகிறது. மிகப்பெரிய 3 பணக்கார முதலாளிகளின் கையில் அனைத்து அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும் என பாஜ நினைக்கிறது. ஏற்றத்தாழ்வு மிகுந்த சமத்துவமற்ற இந்தியாவை கட்டமைக்க பாஜ நினைக்கிறது. இந்திய பிரதமரை நான் தொலைபேசியில் அழைத்தால் அவர் எழுந்து நின்று சார் என பணிவோடு பேசுவார் என டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகவே கூறுகிறார். டொனால்ட் டிரம்ப், குதியுங்கள் என கூறினால் மோடி குதிப்பார், குட்டிக்கரணம் போடு என்றால் குட்டிக்கரணம் போடுவார்.
டிரம்ப்பிடம் தான் இருப்பது போல, தமிழ்நாடு முதல்வர் தன்னிடம் இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். தமிழக முதல்வரை தொலைபேசியில் அழைத்தால் அவர் எழுந்து நின்று சார் என சொல்ல வேண்டும் என நினைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று மோடியை சார் என அழைக்கமாட்டார். மோடியின் திட்டம் எதுவும் மு.க.ஸ்டாலினிடம் ஒரு போதும் எடுபடாது என்பது தான் பிரச்னை. ஆனால் இதுவே அதிமுகவை சேர்ந்தவர் முதல்வரானால், என்ன சொல்லுங்கள் சார், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என பவ்யமாக கேட்பார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
* ‘சிறுபான்மையினர் வாழ பயமாக உணர்கிறார்கள்’
‘‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவைப் பொறுத்தவரை மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் நம் நாடு முழுவதும் சிறுபான்மையினரை எப்படித் தாக்குகிறார்கள் என்பதுதான். நமது வரலாற்றில், நமது நவீன வரலாற்றில் முதல்முறையாக, சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழ்வதற்கு அசவுகரியமாகவும் பயமாகவும் உணர்கிறார்கள். இந்த நாடு வெறுப்பு நிறைந்த நாடு அல்ல. இந்த நாடு அன்பு மற்றும் பாசம் நிறைந்த நாடு’’ என்று ராகுல் காந்தி கூறினார்.
* ‘எனக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனித்துவமான உறவு’
எனக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே ஒரு தனித்துவமான உறவு இருப்பதை ஒவ்வொரு தமிழரும் அறிவார்கள். இந்த உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது நம்பிக்கை, அன்பு மற்றும் பாசத்தின் உறவு. இந்த உறவை நீங்கள் எனது பாட்டியுடனும், எனது தந்தையுடனும் பகிர்ந்து கொண்டீர்கள். இதை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இந்த மாநிலத்தில் பிறந்திருக்காமல் இருக்கலாம், ஆனால் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாறு, தமிழ் மரபுகளை என் உயிரைக் கொடுத்துப் பாதுகாப்பேன்’ என்றார் ராகுல்காந்தி.
* ‘ஊழல் காரணமாக பாஜவிடம் சரண் அதிமுக ஒரு வெற்றுக்கூடாக உள்ளது’
குமரி மாவட்டம், குளச்சலில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மதச்சார்ப்பற்ற முற்போக்க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பேசியதாவது: பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் தாக்கப்படக் கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனது சொந்தக் குரலைக் கொண்டிருக்க வேண்டும், தனது சொந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்தின் மக்களும் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டின் ஆண்களும் பெண்களும் தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால் பாஜ அவ்வாறு நினைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களின் அதிகாரத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது. டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள பாஜ விரும்புகிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அதிமுக தமிழகத்தின் முன்னேற்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றியுள்ளது. அதை நான் மறுக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழக மக்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்கள் அதிமுகவில் இருந்தனர்.
ஆனால் இன்று அதிமுக ஒரு வெற்றுக் கூடாக உள்ளது. தற்போது அது தமிழகத்திற்குள் நுழைவதற்கான பாஜவின் கருவியாக மாறியுள்ளது. அதிமுகவின் தலைமை அவர்களின் ஊழல் காரணமாக பாஜவிடம் சரணடைந்துள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் பினாமி மூலம் தமிழ்நாட்டை ஆளத் திட்டமிடுகிறது, முயல்கிறது. திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் எங்களது கூட்டணி ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்து தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் வரலாற்றை பாதுகாத்து வருகிறது. ஆர்எஸ்எஸ் திராவிட சித்தாந்தத்தை வெறுக்கிறது. ஏனென்றால் தங்களுக்கு சவால் விடக்கூடியவர்கள் தமிழர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தங்களை எதிர்க்கப்போவது வீரமிக்க தமிழ் மக்கள் என்பது அவர்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் ஒருபோதும் அவர்களிடம் சரணடைய மாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அதிமுகவுடன் இணைந்து வரும் இந்தப் புதிய நுட்பத்தை முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
