செங்கல்பட்டு: விஜய்-சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, இது குடும்ப நல வழக்கு என்பதால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதோடு 20.4.2026 அன்று (இன்று) விஜயும், சங்கீதாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இது சம்பந்தமாக சங்கீதா தரப்பில் வக்கீல்கள் ரத்தின அசோகன், மஞ்சுளா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர், என்னை பிரிந்து வாழ்கிறார்.
ஒரே வீட்டில் இருவரும் இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை. என்னை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார். எனக்கு பணம் எதுவும் தருவதில்லை. இதனால் வாழ்க்கை நடத்த எனக்கு சிரமமாக உள்ளது. மேலும் அவருக்கு, ஒரு நடிகையுடன் தொடர்பு உள்ளது. நெருக்கமாக பழகி வருகிறார். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். நான் தற்போது எப்படி சுதந்திரமாக வாழ்கிறேனோ அதுபோன்று செலவுக்கான பணத்தை வழங்க வேண்டும். சொத்தில் எனக்கும் எனது மகனுக்கும் பங்கு வழங்க வேண்டும். வழக்கு முடியும் வரையில் நான் தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது’ என கூறியிருந்தார். இந்த மனு விஜய்யின் முகவரிக்கு நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்டது.
மேலும், விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை, சென்னை நீலாங்கரையில் உள்ள தங்களுக்கு சொந்தமான இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று சங்கீதா, நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணை இன்று குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேகேஎஸ்.ஜெயராமன், குமரேசன் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ‘நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, தவறான காரணங்களை கூறி விவாகரத்து கோரியுள்ளார். விஜய், அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இது முற்றிலும் தவறானது. அவர் பிரபலமான நடிகர் மற்றும் கட்சி தலைவர் என்பதால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக இயலாது. ஆகவே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கில் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட நீதிபதி சசிகலா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி அளித்தார். அதோடு சங்கீதா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உரிய அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றும் வழக்கறிஞர்கள் கோரினர். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, பதிலளிக்க போதிய அவகாசம் அளித்தும் வரும் ஜூன் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
இது சம்பந்தமாக விஜயின் மூத்த வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் விஜய் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்தோம். அதில், விஜய், பிரபல நடிகர். கட்சி தலைவர். அவர் சம்பந்தப்பட்ட செய்தி கோர்ட் மூலம் ஊடகங்களுக்கு சென்று விடுகிறது. அதனால் இந்த வழக்கு விசாரணையை வெளியே தெரியாதபடி ரகசியமாக நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர். இந்த மனு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். இதனால் பதற்றமாக காணப்பட்டது.
