ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பிரசார பொதுக்கூட்டம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கு அருகில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: நாங்கள் ஜனநாயகம், நீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடி வருகிறோம்.
ஆனால், மோடி சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் எதிரான மனுஸ்மிருதி கொள்கையை அமல்படுத்த துடிக்கிறார். மோடியின் தத்துவம் பெண்களை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைப்பதே. 2023ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை?. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, விலைவாசி குறைப்பு என மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன.
மோடி என்றாலே பொய் என்று தான் பொருள். ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு நாட்டை இணைத்த போது, மோடி குகைகளில் தியானம் செய்வதிலும், கங்கையில் நீராடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினார். ஸ்டாலினின் சித்தாந்தத்தை கண்டு மோடி பயப்படுகிறார். நாடு முழுவதும் இன்று ராகுல்காந்தி மற்றும் ஸ்டாலின் பின்னால் நிற்கிறது. மு.க.ஸ்டாலின் உங்களின் அன்புக்கு பாத்திரமானவர். அவருக்கு மூட நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை.
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் இருந்து வருகிறார். சமூக நீதியை நிலைநாட்டுவது, சுய மரியாதையை காப்பது போன்றவற்றில், மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக திகழ்கிறார். தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி நமக்கு கிடைத்துள்ளது. மோடியை பொறுத்தவரை, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்ப்பதையே செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிய திட்டங்களுக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை தொலைநோக்குடன் திட்டங்களை செய்து வருகிறது. இதற்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம். எனவே, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
